ஆர்.முத்துக்குமார்
சென்ற வாரம் தமிழக விளையாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம் என்றே கூற வேண்டும். இந்தியாவின் பெருமைமிகு விளையாட்டு கட்டுமானம் நம் மாநிலத்தில் இருந்தும் தேசிய, சர்வேசப் போட்டிகள் சமீபமாக இல்லையே என்ற நிலையை மாற்றிய வாரமாகும்!
ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டிகள் துவங்கிய நாள் முதலாய் பரபரப்பிற்கு பஞ்சமே கிடையாது! எல்லா ஆட்டங்களும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து நேற்று தான் முடிந்தது.
சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதிய போட்டி அனல் பறக்க ரசிகர்களின் ஆரவார வரவேற்பை பெற்றது.
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது, அதை சென்னையில் சிறப்பாக நடத்தியிருப்பதில் தமிழக அரசின் பங்கு பாராட்டுக்குரியது.
இதையெல்லாம் பின்தள்ளிய ஓர் தலைப்பு செய்தி நமது உலகப் புகழ் செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தை முந்தியுள்ளார் 17 வயது இளம் இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்.
குகேஷ்சும் சென்னையில் பிறந்து, வேலம்மாள் பள்ளியில் படிக்கும் போதே செஸ் வீரராக உயர விசேஷ பயிற்சியை பெற்றவர் ஆவார்.
குகேஷ்சின் சாதனையை மனம் திறந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:–
ப்பைடு (FIDE) செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷூக்குப் பாராட்டுகள். உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தியுள்ளன. உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளந்திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது என்றார்.
5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி 17 வயதான சென்னை வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராகி உள்ளார்.
பிடே உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில் 17 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை வீரர் குகேஷ் 2வது சுற்றில் அஜர்பைஜானின் மிஸ்ரடின் இஸ்கந்தரோவ்வை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 44-வது காய் நகர்த்தலின் போது குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிடேவின் லைவ் ரேட்டிங்கில் குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி 9-வது இடத்தை பிடித்தார். விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 1-ம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை குகேஷ், ஆனந்தை விட முன்னிலையில் இருந்தால் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருப்பார். கடந்த 1987-ம் ஆண்டு முதல் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்து வருகிறார். இதன் மூலமாக கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி குகேஷ் இந்திய தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார். அதுமட்டுமின்றி பிடே ரேட்டிங் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடத்திற்கு வந்த இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் நிகழ்த்தி யிருக்கிறார்.
குகேஷ் செஸ் விளையாட கற்றுக் கொண்டபோது அவருக்கு 7 வயது. வேலம்மாள் குழுவில் அங்கம் வகிக்கும் பள்ளி மூலம் குகேஷ் செஸ் போட்டியில் அறிமுகம் ஆனார். அவரது பயிற்சியாளர் பாஸ்கர், குகேஷின் திறனை கண்டறிந்து, விளையாட்டைக் கற்றுக்கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு, பிடே -மதிப்பீடு பெற்ற வீரராக மாற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை பின்னுக்கு தள்ளியதாக கருதாமல் நாட்டின் அடுத்த தலைமுறை செஸ் மன்னன் வந்து விட்டான் என்ற வகையில் தான் மகிழ்ச்சி அடைவதாக விஸ்வநாத ஆனந்த் பாராட்டி வரவேற்று இருக்கிறார்.
இது குகேஷக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்பது மட்டுமல்ல, நாட்டின் செஸ் வரலாற்றின் அதிமுக்கிய நாளாகும் என்று ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
நான் தற்போது ஓய்வு பெறும் தருணத்தில் 37 ஆண்டுகளாக தலைமை வகித்த இடத்தை ஓர் 17 வயது இளைஞன் என்னை முந்தியிருப்பது எனக்கும் பெருமையுடன் நான் கடந்து வந்த வரலாற்றின் சிறப்புமிக்க பாதையை நினைத்து பெருமைப்படுகிறேன்.
குகேஷின் வெற்றிப் பயணம் தற்போது தான் துவங்கி இருக்கிறது, மேலும் பல உச்சங்களை தொட நானும் அவனுக்கு உதவ துவங்கி விட்டேன், அவன் பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் தந்தும் வருகிறேன் என்று கூறியுள்ளார்.
செஸ் உலகின் வல்லரசு இந்தியா என்பதை உறுதிபடுத்தியவர் ஆனந்த் ஆவார். அவரது வெற்றியை தொடர்ந்து பல ஆயிரம் இளம் வீரர்கள் தமிழகத்தில் இருந்தும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் உதயமானார்கள்.
ஆனந்தின் வரவு இந்த செஸ் வல்லமைக்கு உறுதியை ஏற்படுத்தியது, இனி அப்பொறுப்பு இளம் தலைமுறை நாயகனாக நம் முன் தோன்றியிருக்கும் குகேஷ் கைகளில் வந்துவிட்டது!