சிறுகதை

செவிலித்தாய் | ராஜா செல்லமுத்து

ஐஸ்வர்யாவுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தட்டுப்பட்டது. ரத்தமும் சதையுமாய் பிறந்த சிசுவைத் தொட்டுத்தூக்கும் போது, நாடி நரம்பெல்லாம் ஒரு புதுவிதமான அதிர்வு ஏற்பட்டது.

“குவா… குவா” என்று பூமியில் பிறந்த பிஞ்சுப் பூ அழும் போது, அந்த அழுகையின் ஆலாபனை அவளை என்னவோ செய்தது.

“டுர்” டுர்” என்னடா கண்ணா… ஏன் அழுற அழாத இந்தா ஒங்க அம்மா இருக்காங்க பாரு. இந்தா ஒங்க அம்மாவ பாரு என்று ஐஸ்வர்யா அந்த ரத்தப் பிஞ்சைத் தொட்டுத் தூக்கித் துடைத்து சுத்தப்படுத்தினாள்.

சதை மலராய் முகம் மலர்ந்த அந்த அழகுக்குழந்தை ஐஸ்வர்யாவின் கையிலிருந்து நழுவிக் கொண்டே இருந்தது. பிள்ளை பெற்ற பெருமயக்கத்தில் கண்மூடிக்கிடந்தாள், ராமுத்தாய். அவளுக்கும் சிசுவுக்குமான தொப்பூழ்க்கொடி வெட்டப்பட்டு ரத்தம் சொட்டிக்கிடந்தது. இமை மூடிய இருள் மயக்கம் அவளை இன்னும் விழிப்பு கொள்ளச் செய்யாமலே இருந்தது. அந்தக் கருப்புக் குழந்தையைத் தொட்டுத் துடைத்து தூய்மையாக்கினாள் ஐஸ்வர்யா. அந்தத் தளிர்க்குழந்தை தன் சன்னக்குரலில் சின்னதாய் அழுது கொண்டே இருந்தது.

“ம்மா… ம்மா….. இன்னும் கொஞ்சம் நேரம் இன்னும் கொஞ்ச நேரம்டா “ஐஸ்வர்யா சொல்லிக் கொண்டே பிரசவ மயக்கத்தில் கிடந்த ராமுத்தாயின் மார்பில் சிசுவின் முகம் புதைத்தாள்.

“ம்ம்ம்” என்று முணங்கிய அந்தக் குழந்தை, யாருக்கும் காத்திராமலே தன் அன்னையின் மார்பில் தன் சின்ன இதழ்கள் திறந்து அமுதம் அருந்தியது.

தன் மேனியில்பட்ட சிசுவின் உதடு, ராமுத்தாயை என்னவோ செய்து, அவள் கண்களை மெல்லத்திறக்கச் செய்தது. ஆயிரம் டன் சுமைகளை ஏற்றிய இமைகளாய் பெருத்த கனத்தோடு மெல்ல மெல்ல தன் இமைகளைத் திறந்தாள், ராமுத்தாய். தன் கரங்களை மெல்ல எடுத்துக் குவித்து அந்தப் பிஞ்சு ரோஜாவைத்தன் மார்போடு சேர்ந்தாள். தன், பூனைக்கண்களைத் திறந்து திறந்து பார்த்த குழந்தை, தாயின் சூடு பட்டதும் மெல்ல அசைந்தது.

“சரி….. சரி…. பால்குடிக்கிறயா? பால்குடிம்மா ம்ம்ம்… என்ற ஐஸ்வர்யா தன் பாசமொழியை, பேச்சு வராத அந்தப் பிஞ்சுப் பிள்ளையிடம் பேசிக் கொண்டே இருந்தாள். அந்த மருத்துவமனைப் பிரசவ வார்டில், பிஞ்சுப் பூக்களின் முணகல் சத்தம், அழுகைச் சத்தம், அந்தப் பகுதி முழுவதும் ஒரு மெல்லிய சங்கீதத்தை மெருகூட்டி வலியூட்டியது.

அந்தப் பிஞ்சு பால்க் குடிக்கும், அழகை ஆச்சர்யம் கலந்து பார்த்துக் கொண்டிருந்தாள், ஐஸ்வர்யா. அவள் உடுத்தியிருந்த வெள்ளை உடையும், அவள் தலையில் அணிந்திருந்த வெள்ளைத் தொப்பியும் அவள் நிறத்திற்கு இன்னும் எடுப்பாய் இருந்தது. வலியின் பிடியிலிருந்தாலும் தன் சிசு பாலருந்துவதைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ராமுத்தாய்.

“சரி, சரி, சரி போதும் அம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் சரியா? என்ற ஐஸ்வர்யா, அந்தப் பிஞ்சுக் குழந்தையை ராமுத்தாயிடமிருந்து தூக்கினாள்.

அந்தக் கறுப்புக் குழந்தையின் சிவந்த உதட்டில் தாய்ப்பால் அழகாய் ஒட்டியிருந்தது. படுத்த படுக்கையிலிருந்து கொஞ்சம் மேலே படுக்க எத்தனித்தாள். ராமுத்தாய் பாத்து, பாத்து என்ற ஐஸ்வர்யா, ராமுத்தாயையும் தூக்கி மேலே உட்கார வைத்தாள்.

“ரொம்ப வலிக்குதா”

என்ற ஐஸ்வர்யாவின் கரிசனையான கேள்விக்கு, அவளால் பதிலேதும் சொல்ல முடியவில்லை, “ஆமா” என்று தலையை மட்டுமே ஆட்டினாள்.

சரியா போகும், ரெஸ்ட் எடுங்க. இதுயென்ன பொம்பளைங்களுக்கு புதுசா என்ன, எல்லாரும் அனுபவிக்கிறது தான். இது பெரிய விசயமில்ல” என்ற ஐஸ்வர்யா அலங்கோலமாய்க்கிடந்த ராமுத்தாயின் உடைகளைச் சரிசெய்தாள். அப்போது இன்னொரு செவிலித்தாயான செல்வியும் அந்த அறையினுள் நுழைந்தாள். என்ன ஐஸ், கொழந்த எப்படி இருந்துச்சு, நல்லா கொழு கொழுன்னு இருந்துச்சா

“ம்”

“நீயும் இந்த வேலையவிட மாட்ட . இந்த வேல செய்யுற ஒன்ன ஒங்க மாமன் மகன் வேணாம்னுவேற சொல்றான். என்ன தான்டி ஒன்னோட கத .இது இப்படியே போனா, ஒன்னோட வாழ்க்கை என்னாகுறது. கொஞ்சம் நெனைச்சுப்பாரு ஐஸ்… நீயும் இந்த மாதிரி கொழந்த பெத்து, கொஞ்சி பால் குடுக்கணும்னு ஆசை இல்லையா? ஐஸ் என்ன நான் சொல்றேன். எதுவுமே பேச மாட்டேன்கிறயே. என்னாச்சு என்று செல்வி பேசிய போது பொலபொல வெனக் கண்ணீர் சிந்தினாள், ஐஸ்வர்யா.

ஏய், என்னாச்சு ஏன் இப்படி அழறே?

ஏய் ஐஸ்…. என்று அவளின் தோள் தொட்டாள், செல்வி.

“இல்லக்கா …. என்னென்னே எனக்கு தெரியல. இந்த வேல எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பெறந்த ஒவ்வொரு பிஞ்ச தூக்கும் போதும், அவங்க கூட பேசும் போதும் எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. நான் கல்யாணம் பண்ணாம போனாலும் பரவாயில்ல. என்னைய யாரும் வேண்டான்னு சொன்னாலும் சரி; நான் இந்த வேலைய இல்லக்கா இந்த சேவைய நான் விடமாட்டேன். இது சரின்னு சொல்ற ஆளு யாரோ, என்னையப் புரிஞ்சுக்கிற மனுசன் எவனோ அவன தான் நான் கல்யாணம் பண்ணப் போறேன். இல்லன்னா நான் கடைசி வரைக்கும் இப்படியே இருந்துட்டு போறேன் என்று ஐஸ்வர்யா சொன்ன போது

“குவா…….. குவா….. என்று சன்னமாய் அழுத பிஞ்சுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு “ஒண்ணும் இல்லடா, இந்தா இந்தா அம்மா இருக்காங்க பாரு” இந்தா பாரு ஒங்க அம்மா இங்க பாரு “என்று அந்தச் சிசுவைத் தூக்கி தன் தோளில் போட்டு, அதன் முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவளை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், செல்வி, அந்தப் பிரசவ அறை முழுவதும் சிசுவின் குவாகுவா சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *