சிறுகதை

செல்லாக்காசு – ராஜா செல்லமுத்து

தீபன் தன் நண்பர்களுடன் அன்று மதியம் சாப்பிடச் சென்றான். மணக்க…. மணக்க….உணவு வகைகள் ஆடர் செய்து சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டதற்குப் பில் வந்தது. தன்னுடைய டெபிட் கார்டை எடுத்து வைக்கலாம் என்று நினைத்தான்.

பிறகு என்ன நினைத்தானாே தெரியவில்லை. பணத்தை எடுத்து வைத்தான்.

பணம் வைத்த பில்லைக் கையில் எடுத்துக் கொண்டு சிப்பந்தி சென்றான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மீதப் பணத்தைக் கொண்டு வந்தான். அதில் பத்து ரூபாய் நாணயங்கள் நிறைய இருந்தன.

சில நாணயங்களை எடுத்து பையில் போட்டுக் கொண்டு, சில நாணயங்களை டிப்ஸாக வைத்தான். நண்பர்கள் அந்த உணவு விடுதியை விட்டு வெளியேறினார்கள்.

பகல் முழுக்க வேறு பணிகள் செய்த தீபன், சில பணிகளைச் செய்துவிட்டு, ஒரு கடையில் தன் கையிலிருந்த பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு கடையில் கொடுத்தான்.

ஆனால் அந்தக் கடைக்காரர் அந்த நாணயத்தை வாங்கவில்லை. வாங்க மறுக்கிறார்

ஏன் வாங்கவில்லை என்று நினைத்த தீபன், அப்போதுதான் அந்த பத்து ரூபாய் நாணயத்தை திரும்பிப் பார்த்தான். அந்த நாணயத்தில் எந்தவிதமான பத்து ரூபாய்க்கு அடையாளமே இல்லாமல் வெறும் நாணயமாக இருந்தது.

அதைப் பார்த்தவனுக்கு கோபம் வந்தது.

என்ன இது எவ்வளவு பெரிய மோசடியா இருக்குது? இவ்வளவு பெரிய உணவு விடுதியில் செல்லாத காசு வைத்து ஏமாற்றுகிறார்களா? என்று நினைத்தவன் மனதிற்குள் அந்த உணவகத்தை பற்றி தவறாக நினைத்தான்.

அந்தப் பத்து ரூபாயை கீழே தூக்கி போடுவதற்கும் அவனக்கு மனம் வரவில்லை. யாருக்காவது கொடுத்து விடலாமா? என்றால் மற்றவர்களுக்கு அதைக் கொடுப்பது தவறு என்று நினைத்தான்.

சரி என்ன செய்யலாம்? என்று நினைத்தபோது, யோசனை வரவில்லை.

இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தான். அன்று இரவு பணிகள் முடித்து விட்டு அவன் மட்டுமே சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவன் அருகில் இருந்த பெரிய உணவகத்திற்குப் போய் உணவை ஆர்டர் செய்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் உணவு அவன் முன்னால் வந்தது. சாப்பிட்டு முடித்தான்.

சாப்பிடுவதற்காக தொகையும் வந்தது. தொகையைக் கொடுத்துவிட்டு யோசித்தான். திரும்பவும் தன் சாப்பிடுவதற்கான பில் தொகையைப் பார்த்தான்.

அப்போதுதான் தெரிந்தது

தான் சாப்பிட்டது காலையில் பாேன பெரிய உணவகத்தின் இன்னொரு கிளை தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டான்.

தொகைக்கான பணத்தைக் கொடுத்த சிப்பந்தி அந்த பில்லையும் பணத்தையும் திரும்பக் கொடுத்தான்.

அப்போதான் அவருக்கு யோசனை வந்தது.

அவன் பாக்கெட்டில் கை விட்டான். செல்லாத அந்த பத்து ரூபாயை எடுத்து அந்த சிப்பந்தி கொடுத்த பில்லில் வைத்தான். அவனுக்கு ஒரு சந்தோசம்.

இதே நிறுவனம் தான் நமக்கு இந்த 10 ரூபாய் கொடுத்து ஏமாற்றியது. அந்த பத்து ரூபாயை அந்த நிறுவனத்திடமே கொடுத்தது தவறில்லை என்று நினைத்து வெளியே வந்தான் .

அவன் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி முளைத்தது.

காரணம் தன்னை ஏமாற்றியவர்களை இறைவன் அடுத்த நொடியே காட்டிக் கொடுத்துவிட்டான். இதுதான் விதி. என்பது என்பது நினைத்தவன் செல்லாக்காசை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டு வெளியேறினான்.

அவன் பையில் இருந்த மற்ற காசுகள் சலக் எனச் சத்தமிட்டன.

Leave a Reply

Your email address will not be published.