சென்னை, ஜூன் 9–-
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:–-
கடந்த 2022–-23–-ம் நிதியாண்டில் 27 ஆயிரத்து 295 செல்லப்பிராணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு 1,700 செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, 20 ஆயிரத்து 385 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு 15 ஆயிரத்து 755 தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் கால்நடை மருத்துவப் பிரிவின் கீழ் 4 செல்ல பிராணிகள் சிகிச்சை மையங்கள், 5 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள், 4 இறைச்சிக் கூடங்கள், 2 மாட்டுத் தொழுவங்கள் மற்றும் 1 தோல் நோய் பராமரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், செல்லப்பிராணிகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் நலன் கருதி சென்னை மாநகராட்சியின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து செல்லப் பிராணிகளுக்கும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்படும். மேலும், வயது முதிர்ந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட செல்லப் பிராணிகளை தெருவில் விடுவது தடுக்கப்படும். நாய்கள் மற்றும் பூனைகள் ஆகியவைகளின் எண்ணிக்கையை மண்டல வாரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை அனைத்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொண்டு, சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்து, ஆன்லைன் வாயிலாக ரூ.50 செலுத்தி, தங்கள் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.