சிறுகதை

செல்போன்… !- ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

கொஞ்சம் கூட்டமாக இருக்கும் பேருந்தில் ஏறலாமா ? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தான் காசி. தற்போது மணி ஒன்பதைக் கடந்து விட்டதால் எப்படியும் அலுவலம் செல்வதற்கு இதுதான் சரியான நேரம். இல்லை என்றால் தாமதம் ஆகிவிடும் வேறு வழியில்லை என்று கூட்டமான அந்த பேருந்தில் ஏறி முன் வரிசையில் நின்றான் காசி. இப்போதெல்லாம் எந்த நடத்துனரும் தன் இருக்கையை விட்டு எழுந்து வருவதில்லை.

காசாளர் போல அமர்ந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு அத்தனை பேரையும் அதிகாரத்தால் பயணச் சீட்டு வாங்க சொல்லி அங்கேயே அமர்ந்து விடுகிறார்கள். பேருந்தில் கூட்டமாக இருந்தாலும் கூட்டம் இல்லாமல் இருந்தாலும் நடத்துனர்கள் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்த காசி தன் சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து

” ஒரு கேளம்பாக்கம் டிக்கெட் குடுங்க “என்று அருகில் இருந்து ஒரு ஆணிடம் கேட்க

“சார் லேடிஸ் பக்கம் குடுத்து விடுங்க. அந்த வழியா போனா கண்டக்டர்கிட்ட ஈஸியா போய்டும். உங்க டிக்கெட்டும் உங்களுக்கு ஈசியா வந்துரும். என்கிட்ட கொடுத்தா திரும்பவும் நான் லேடிஸ் பக்கம் தான் கொடுக்கணும் ” என்று தான் உதவி செய்யாததை நாசுக்காக காசியிடம் சொன்னான் அந்தப் பயணி .

அவனின் தவிர்த்தலைப் புரிந்து கொண்ட காசி சிரித்துக்கொண்டே அருகில் இருந்த பெண்ணிடம்

” அம்மா இத பாஸ் பண்ணி எனக்கு ஒரு கேளம்பாக்கம் டிக்கெட் வாங்கி கொடுங்க”

என்று கேட்க தன் காதில் இயர் போனை வைத்துக்கொண்டு பாடல் கேட்டபடியே சென்று கொண்டிருந்த அந்தப் பெண்மணி காசியின் பேச்சைக் கவனிக்கவில்லை. அந்தப் பெண்ணைத் தொட்டு சொல்வதா? இல்லை சத்தமாக பேசுவதாக ? குழம்பிப் போனவன் வேறு வழியில்லை . தொட்டுத் தான் ஆக வேண்டும் என்று அந்தப் பெண்ணின் தோளிலே லேசாகத் தொட சற்றுக் கோபத்தோடு திரும்பிப் பார்த்த அந்தப் பெண்மணி

என்ன ? என்று கேட்டாள்.

” ஒரு கேளம்பாக்கம் டிக்கெட் வாங்கி தாங்க ” என்று சொல்ல

“அதுக்காகத் தொட்டுத்தான் கேப்பீங்களா? என்ன மேனரிசம் இது ” ? என்று தன் இருப்பை மறுபடியும் உறுதி செய்த அந்தப் பெண் காசியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அடுத்தடுத்த பெண்களிடம் கொடுத்து அனுப்பினாள்.

” ஒரு கேளம்பாக்கம் டிக்கெட். ஒரு கேளம்பாக்கம் டிக்கெட் ” என்று. கடைசியில் நடத்துனிடம் போய்ச் சேர்ந்தது. ஒய்யாரமாக அமர்ந்திருந்த அந்த நடத்துனர் கேளம்பாக்கம் டிக்கெட்டைக் கிழித்து அருகில் இருந்த பெண்ணிடம் கொடுக்க கைமாறிக் கைமாறி கடைசியில் காசியிடம் வந்த போது

“ஐயையோ, ” என்று கதறினார் காசி.

” என்ன இது? கேளம்பாக்கம் டிக்கெட் கேட்டார் வாங்கி கொடுத்திருக்கம் .அதுக்கு ஏன் இவர் அழணும் ? “என்று டிக்கெட்டுக்கு பணம் வாங்கிய பெண் விழிக்க

” என் செல்போனைக் காணோம். யாராே எடுத்துட்டு போயிட்டாங்க என்று அழுதார். அதுவரையில் ஏதோ நினைத்துக் கொண்டிருந்தவர்கள் அந்தப் பேருந்தில் தன் செல்போனை தவற விட்ட காசி அழுது கொண்டிருப்பது அந்த பயணிகளுக்கு என்னவோ போலானது. காசியின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பயணி

“உங்க பின்னாடியே ஒரு சிகப்பு டீசர்ட் போட்ட ஒரு ஆள் ஏறினான். உங்களை தள்ளிக்கிட்டே இருந்தான். ஒருவேள அவன் உங்க செல்போன அடிச்சு இருக்கலாம்னு நினைக்கிறேன் .செல்போன எங்க வச்சிருந்தீங்க? என்று பயணிகள் கேட்க

“மேல் பாக்கெட்டில என்று சொன்னார் காசி .அவரின் கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்தன.

” எல்லாம் போச்சே. அதுல தான் எல்லா டீடெயில்ஸ்ம் இருக்குது. அதுவும் இப்பதான் வாங்கினேன் போச்சே ” என்று அழுதார். பேருந்து நிறுத்தப்பட்டது.

” என்ன ஆச்சு? என்று ஓட்டுனர் கேட்க

” சார் ஒருத்தர் செல்போன் திருட்டுப் போயிருச்சாம் சார்” என்று அழுது கொண்டே சொன்னார் ஒரு பயணி.

” அவங்க அவங்க பொருளை அவங்க அவங்க பத்திரமா வைக்க மாட்டீங்களா ?அதுவும் இந்த சென்னையில எவன் திருடன் . எவன் நல்லவன்னு தெரியல. உங்க பொருள நீங்கதான் பத்திரமா. வச்சுக்கணும். என்ன பண்றது? போலீசில கேஸ் கொடுக்கலாமா? என்று ஒருவர் கேட்க,

‘சார் பஸ்ல கேமரா இருக்கா?

” கேமரா இருக்கு. ஆனா அது வேலை செய்யாது “என்று ஓட்டுனர் சொல்ல

” பெறகு எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி கேமரா வச்சீங்க?” என்று அரசாங்கத்தின் மீது ஒருவன் சொற்‘ கல்’ லெறிய அங்கே சிறிய சலசலப்பு ஏற்பட்டது .

“போனது போயிருச்சு. இனி பலன் இல்ல. அந்த செல்போன் எடுத்துட்டு போனவன் இந்நேரம் என்ன பண்ணி இருப்பானோ .எடுத்தவன் நிக்க மாட்டான் .அடுத்தடுத்து போயிட்டே இருப்பான் . நீங்க போன் பண்ணி பாருங்க “என்ற போது அருகில் இருந்த ஒரு பயணிடம் தன் செல் போன் நம்பரை சொன்னான் காசி

காசி சொன்ன நம்பருக்கு டயல் செய்ய சுவிட்ச் ஆஃப் என்று வந்தது .

“பாத்தீங்களா? திருடனுக எல்லாம் ரொம்ப சரியா இருப்பானுங்க. உடனே போன் ஆப் பண்ணிட்டான் பாருங்க” என்று பயணிகள் ஆளாளுக்கு சொல்ல, வேறு வழியின்றி பேருந்து பயணப்பட்டது . செல்போனைத் தொலைத்த கவலையில் சென்று கொண்டிருந்தான் காசி.

” அப்பா சுகர் மாத்திரை போடலம்மா என்று காசியின் மகள் சொல்ல

“தெரியல. மாத்திரைய வீட்டுலயே வச்சிட்டு போயிட்டாரு . அவருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லும்மா என்று காசி வீட்டில் மகள் கரிசனையாகச் சொல்ல

” உங்க அப்பாவுக்கு எப்பவுமே மறதிதான் மாத்திரைய எடுத்து வைப்பாரு. சாப்பிட்டதுக்கு பின்னாடி, மாத்திரை போட மறந்துடுவார் . சரி இப்ப நான் போன் பண்றேன்” என்று காசிக்கு போன் செய்தாள் அவனின் மனைவி.

” செல்போன் இஸ் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

” உங்க அப்பாவுக்கு என்ன ஆச்சு? போன் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கார்” என்று மனைவி சொல்ல

“சார்ஜ் ஏதும் போட்டாரோ இல்லையாம்மா? மறுபடியும் ட்ரை பண்ணு ” என்று மகள் சொல்ல திரும்பவும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என்ற குரலே திரும்ப ஒலித்தது.

” மனுஷன் இவரு ஏன் போன சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்காரு ? என்று மனைவி வீட்டில் பதறிக் கொண்டிருந்தாள்.

பேருந்தில் செல்போனைத் தவற விட்ட பரிதவிப்பில் சென்று கொண்டிருந்தான் காசி.

“மாத்திரைய கடையிலயாவது வாங்கிப் பாேடுவாருன்னு சொல்லலாம்னா போன் ஸ்விட்ச் ஆப்னு வருதே என்று காசியின் மனைவி மறுபடியும் மறுபடியும் ட்ரைப் பண்ணிக் கொண்டே இருந்தாள்.

செல்போன் ஸ்விட்ச் ஆப் என்றே வந்து கொண்டிருந்தது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *