” கையில தான் வச்சிருந்தேன். எப்பிடிக் காணாமப் போச்சுன்னு தெரியல. அதுல ஏகப்பட்ட நம்பர் இருக்கு . இப்பிடி ஆகியிருச்சே “என்று ஓடும் பேருந்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டே புலம்பிக் கொண்டிருந்தார், கபீர். அவர் அங்குமிங்கும் நடந்து கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்ததைப் பார்த்த அந்தப் பேருந்துப் பயணிகளுக்கு என்னவோ போலானது.
” ஐயோ…. என் செல்போன் போச்சே “
என்று அழுது கொண்டே தேடிக் கொண்டிருந்தார், கபீர். அவர் வலது கையில் ஒரு பை இருந்தது. இருக்கைகள் நிறைய காலியாக இருந்தும் அவர் உட்காரவே இல்லை. ஓட்டுநர் இருக்கைக்கும் பயணிகளின் கடைசி இருக்கைக்குமாய் நடந்து கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே அலைந்து கொண்டிருந்தவரைப் பார்த்த சீனுவுக்கு இவர் ஏன் இப்படி அலைகிறார் என்று விளங்காமல் இருந்தது. அவன் அப்போது தான் பேருந்தில் ஏறியதால். அங்கு நடந்த விஷயம் எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.
” ஏன் இவரு இப்படி அலஞ்சிட்டு இருக்காரு ? “
என்று அருகில் அமர்ந்திருந்தவரிடம் சீனு கேட்க
” செல்போன தவற விட்டுட்டாராம். “
” ஐயோ ? பாவம் அதான் இப்பிடி புலம்பிட்டு இருக்காரா ? ” செல்போன் போனாலும் பரவாயில்லங்க. அதில இருக்கிற கான்டாக்ட் நம்பர் ரொம்ப முக்கியம்… அத எப்பிடி மீட்டெடுக்கப் போறாருன்னு தெரியல. “
என்று ஒருவர் சொல்ல
“மெயில்ல அட்டாச் பண்ணியிருப்பாரா?
” இல்லங்க… அந்த அளவுக்கு இவரு பண்ணி வச்சிருப்பாரான்னு தெரியல”
என்று சிலர் பேசிக் கொண்டார்கள்.
” பாவம்ங்க. இந்தப் பெரியவரு. நீங்க சொல்றது உண்மை தான் “
அவருக்காகப் பேசிய சீனு தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணச்சீட்டு வாங்கினான்,
” இங்க தான் வச்சிருந்தேன். எப்பிடி காணாமப் போச்சுன்னு தெரியல “
என்று தன் முன் சட்டைப் பை தன் கால்ச்சட்டைப் பை எல்லா இடத்திலும் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டே இருந்தார் கபீர்.
” ஐயா ,பதட்டப்படாதீங்க. ஒக்காந்து ஆற அமரப் பாருங்க. “
என்று கபீரைப் பார்த்துச் சொன்னான் சீனு
” தம்பி, என் நம்பர் போடுங்க “
என்று கபீர் சொல்ல
” ம்… நம்பர்..சொல்லுங்க”
” 9876 ….
என்று நம்பரைச் சொல்ல, சீனு தன் செல்போனை எடுத்து அவர் சொன்ன நம்பரைப் போட்டான்.முழுவதும் ரிங் ஆனது.
” ஐயா போன் போகுது. யாராவது திருடியிருந்தா , இந்நேரம் போன ஆப் பண்ணியிருப்பான் “
என்று சீனு சொல்ல
” ஆமாங்க…. நீங்க சொல்றது உண்மை தான். யாராவது போன எடுத்திருந்தா இந்நேரம் சிம்கார்ட கழட்டியிருப்பானுக… ஐயா , உங்க போன வீட்ல வச்சிட்டு வந்திட்டீங்களா ?
என்று சில பயணிகள் கேட்க
” இல்லங்க…நான் கையில தான் வச்சிருந்தேன். “
என்று அவர் சொல்லும் போதே அந்தக் குரலில் நடுக்கம் இருந்தது.அப்போதும் அவர் இருக்கையில் அமரவே இல்லை. ஒரு பைத்திய காரனைப் போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருந்தார்.என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
” நான் வர்ற ஸ்டாப்ல எறங்கிக்கிறேன்”
என்று சொன்னவர், அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார். பேருந்தில் இருந்த பயணிகள் எல்லாம் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.சீனு அவரை வெறிக்கப் பார்த்தான். இரு கண்களிலும் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இறங்கினார் கபீர் .
அவர் இறங்கிய பிறகும் அவர் கொடுத்த எண்ணிற்கு போன் செய்தான், சீனு. முழு ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவரின் செல்போன் திருடு போனதா? இல்லை இவரே தவற விட்டாரா ? என்பது செல்போனுக்கே வெளிச்சம்.
![]()





