சிறுகதை

செல்போன் – ரமேஷ்குமார்

சரி கடைசி கடைசியாய் ஒரு முறை ஆசை தீர செல்போனைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு உயிரை விட்டுவிடலாம் என்ற முடிவுடன் செல்போனை எடுத்தாள் பிரீத்தி………

பிரீத்திக்கு அப்பா இல்லை. அம்மாவுக்குத் தனியார் ஆஸ்பத்திரியில் ஆயா வேலை.

நேற்று பி.காம்., செமஸ்டர் பரிட்சை முடிவுகள் வெளியானதில் பிரீத்தி அனைத்து பாடங்களிலும் பெயிலாகியிருந்தாள். “இந்த சனியன் தானே உன் புத்தியைக் கெடுத்து படிக்கவிடாம குட்டிச் சுவராக்குது? இனியும் தொடர்ந்து செல்போனை நோண்டிப் பாரு மவளே… அதை உடைச்சு அடுப்புல போட்டுருவேன்”அம்மா இப்படி பத்திரகாளியாய் கத்தி விட்டாள்.

நிச்சயம் அம்மா சொன்னதை செய்வாள்.

கல்லூரியில் எல்லோரிடமும் செல்போன் இருக்க பிரீத்தியிடம் மட்டும் இல்லை; ஆறு மாதத்திற்கு முன் தன் அம்மாவிடம் புலம்பி கெஞ்சி 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு தரமான நல்ல செல்லை வாங்கியிருந்தாள்.

அதைப் பயன்படுத்த பயன்படுத்த செல்போனுக்கு அடிமையானது பிரீத்திக்கே தெரியவில்லை.

‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்பது போய் ‘ காலை எழுந்தவுடன் செல்போன்; பின்பு கனிவு கொடுக்காத அம்மாவின் நல்ல திட்டு’ என்பது பிரீத்தியின் வாழ்க்கையாக மாறிப் போனது.

அம்மா இப்படி பத்திரகாளியாய் ஆன பின், இனிமேல் செல்லை எடுத்து தன் இஷ்டத்திற்கு அதை நோண்ட முடியாதே என்ற கவலையால் தான் ‘மரணம்’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள் பிரீத்தி.

காலை மணி 8.30. அம்மா வேலைக்குப் புறப்பட்டு விட்டாள்.

போகும் போது, “பிரீத்தி, இனியாவது புத்திசாலித்தனமா இருக்க பாரு. அந்த செல்போன் கருமத்தை எந்நேரமும் நோண்டறதை விட்டுத் தொலை. நல்லா படி. அடுத்த தடவையாவது எல்லாத்திலேயும் பாஸ் பண்ணப் பாரு. நான் வேலைக்குப் போய்ட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

அம்மா வாசல்படியைத் தாண்டியதும் வீட்டுக் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டாள் பிரீத்தி.

சரி கடைசி கடைசியாய் ஒரு முறை ஆசை தீர செல்போனைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு உயிரை விட்டுவிடலாம் என்ற முடிவுடன் செல்போனை எடுத்தாள் பிரீத்தி.

முதலில் முகநூல் பக்கம் போய் மூன்று நாட்களுக்கு முன், தான் கல்லூரியில் எடுத்துப் போட்டிருந்த போட்டோ பதிவிற்கு எத்தனை Like வந்துள்ளது என்று பார்க்கப் போனாள்.

அப்போது….அங்கே… ‘கண்ணீர் அஞ்சலி’ என்ற அறிவிப்பு படம் ஒன்று கண்ணில் பட்டது.

அதைப் படித்தவள் அதிர்ந்தாள்.

காரணம்… அந்தப் படத்தில் இருந்தவன் பிரவீன்! அவளுடன் பி.காம்., படிக்கும் சக தோழன். அவன் ஒரு சிறந்த ஓவியனும் கூட. பிரீத்தியின் கண்களில் கண்ணீர் சுரந்தது.

‘அடப்பாவி பிரவீன்… நீ செத்துட்டியா? எப்படி? எப்படி!?’என்று வாய்விட்டுப் புலம்பினாள்.

பதிவைப் போட்டிருந்தது தன் தோழி அனுஷா. உடனே தோழி அனுஷாவுக்குப் போன் செய்தாள். “பிரவீனுக்கு என்னடி ஆச்சு?” அவன் ஒரு கிறுக்கன்டி. அவங்கப்பா ஓட்டல்ல சர்வர் வேலை பார்த்து இவனை காலேஜ்ல படிக்க வைக்கிறார். அதைப் புரிஞ்சுட்டு நல்லாப் படிச்சு பாஸ் பண்ணாம எப்ப பார்த்தாலும் செல்லை நோண்டிட்டே இருந்திட்டு செமஸ்டர் எக்சாம்ல நாலு பாடத்துல பெயிலு ஆகிட்டான்டி. அதைக் கேட்ட அவங்கப்பா கொஞ்சம் அதிகப்படியா திட்டிப் போட்டாரு. அதுக்கு மானம் போச்சு, கௌரவம் போச்சுங்கிற மாதிரி கோவிச்சிட்டு வீட்டு மொட்டை மாடிக்குப் போய் அங்கிருந்து கீழே எட்டிக் குதிச்சிட்டான்டி. ஹ்ம்… ஒரு நல்ல ஓவியனை நம்ம நாடு ஒரு செல்போனால இழந்திடுச்சு!

“பிரீத்தியை பிரவீன் ஒரு முறை பெரிய படமாக வரைந்து அவளின் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்து வாழ்த்து சொல்லியிருந்தான்.

சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தாள் பிரீத்தி.

இப்போது அழுதவாறே தன் தற்கொலை முடிவைக் கைவிட்டு விட்டாள். செல்போனைத் தூக்கிப் போட்டுவிட்டு அவள் பாடப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கவனமாகப் படிக்கத் தொடங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *