சிறுகதை

செல்போன் நம்பர்கள்- ராஜா செல்லமுத்து

ராஜசேகர் செல்போனில் 5000 க்கும் மேற்பட்ட செல்போன் நம்பர்கள் பதிவாகி இருந்தன.

நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் (whatsapp) தொடர்பும் அவரின் செல்போனில் இருந்தது .

தனிநபர் வாட்ஸ் அப் தவிர குரூப் வாட்ஸ் அப் இருந்தது. ஒரு சில சமயங்களில் அவருக்கு எரிச்சல் மூட்டும் அளவிற்கு குரூப்பிலும் தனிப்பட்ட முறையில் ஒரே செய்தியை அனுப்பி எரிச்சல் படுத்துவார்கள்.

எதுக்குத் தான் ஒரே செய்தியை குரூப்லையும் தனியாவும் அனுப்புறாங்களோ தெரியல. செல்போன் ஒருவகையில நமக்கு நல்லது செஞ்சிருக்கு. ஆனா நம்மாேட நேரத்த நிறைய திங்கிது. ஒரு வேலை செய்ய முடியல. எப்பவும் செல்போன பார்த்துட்டு இருக்கும்படியா இருக்கு. ஒலகமே ஒரு நா உங்க கைக்குள் வரும்னு சொன்னாங்க. அது சரியா தான் போச்சு என்று ராஜசேகர் செல்போனை வைத்து புலம்பியபடியே இருந்தார்.

அவரின் புலம்பலைப் பார்த்த வாசு வாய் திறந்து கேட்டு விட்டார்.

ராஜசேகர் ஒங்க போனைக் குடுங்க என்று கேட்டார்.

எதுக்கு ? என்று தர மறுத்தார் ராஜசேகர்.

ஒங்க செல்போன வாங்கி உங்க ரகசியங்களை எல்லாம் எதுவும் திருட மாட்டேன். உங்க செல்போனை கொடுங்களேன் என்று மறுபடியும் கேட்டார் வாசு.

அதற்கு மேல் கொடுக்காமல் இருந்தால் கோபித்துக் கொள்வார் என்று நினைத்த ராஜசேகர் வாசுவிடம் செல்போனைக் கொடுத்தார்.

செல்போன் நம்பர்களை ஆராய்ந்த வாசு

என்ன ராஜசேகர்… இதுல இறந்து போனவங்களுடைய நம்பர் நிறைய இருக்குது. இதெல்லாம் அழிச்சிட வேண்டியது தானே? எதுக்கு போன்ல ஓவர் லோட் ஆக்கிக்கிட்டு இருக்கு என்று வாசு கேட்டபோது

‘எதற்கும் பதில் சொல்லாமல் இருந்து செல்போனை வாங்கிய ராஜசேகர்

வாசு இதுல எறந்தவர்களோட நம்பர் நிறைய இருக்குது. அது உண்மைதான். வாட்ஸ் அப்பும் இருக்குது. ஆனா நான் எதையுமே அழிக்கல. காரணம் எறந்து போனவங்க எல்லாரும் ஒரு வகையில் எனக்கு சொந்தக்காரங்களா.. நண்பர்களா.. இருக்காங்க. அவங்க எல்லாம் என் கூட இருக்கிறது மாதிரியே இருக்கு. அவங்க பேரப் போட்டு நான் பதிஞ்சு வச்சுருக்கிற அந்த நம்பர்கள பாக்கும்போது அவங்க இன்னும் உயிரோட தான் இருக்காங்க. அப்படிங்கிற நினைப்பு எனக்கு வருது . அதோடு புதுத் தெம்பும் வருது. உயிரோட இருக்கிறவங்களில் நல்ல மனிதரா இல்லாதவங்களாேட நம்பர் எத்தன எத்தனையாே என்கிட்ட இருக்கு .. ஆனா அவங்கள எல்லாம் நான் எறந்து போனவங்களா தான் நினைக்கிறேன். ஆனா நல்ல மனசு உள்ள எறந்து போனவங்க நம்பர பாத்தாலே அவங்க இன்னும் உயிரோட இருக்கிறது. மாதிரியும் என் கூட பேசுற மாதிரியும் எனக்குத் தோணுது வாசு. அதுதான் நான் இந்த நம்பர் எல்லாம் அழிக்கிறது இல்ல என்று மனம் உருகி ராஜசேகர் சொன்னபோது

வாசுவிற்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.

என்ன வாசு நான் சொன்னது சரிதானே? என்று மறுபடியும் வாசுவிடம் கேள்வி எழுப்பினார் ராஜசேகர்.

நீங்க சொல்றது சரிதான் என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார் வாசு.

அப்போது ஏதோ ஒரு நம்பருக்கு டயல் செய்த ராசசேகர்

ஹலோ சந்திரனா? எப்படி இருக்கீங்க? என்ன செய்றீங்க? வீட்ல சௌக்கியமா? என்று பேசிக் கொண்டிருந்தார் ராஜசேகர்.

சந்திரனா ? அவர் நமக்கு நண்பர் ஆச்சே. அவர் எறந்து ஒரு வருசாமாகப் போகுது. அவர் போனுக்கு டயல் பண்ணி பேசுற மாதிரி இருக்கே ? என்று நினைத்தார் வாசு .

சரி சந்திரன் கண்டிப்பா நாம சந்திக்கலாம். அடிக்கடி பேசுங்க. வீட்டு வாங்க என்று பேசிக் கொண்டிருந்தார் ராஜசேகர் .

இது வாசுவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இறந்து போன சந்திரனின் எண்ணில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்? இல்லை உயிருடன் இருக்கும் இன்னாெரு சந்திரனிடம் பேசிக் கொண்டிருக்கிறாரா? என்பது வாசுவுக்குக் குழப்பமாக இருந்தது .

வாசுவால் ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை.

ராஜசேகர் தாெடர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தார்.

அவர் இறந்து போனவர்களின் குடும்பத்து வாரிசுகளுடன் தொடர்ந்து பேசிப் பழகி உதவிகள் செய்து வருகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *