செய்திகள்

செல்போன் செயலி மூலம் வீடு, அலுவலகங்களில் மின் பயன்பாடு கணக்கெடுப்பு: மின்வாரியம் சோதனை

Makkal Kural Official

சென்னை, ஆக. 24–-

தமிழகத்தில் வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, செல்போன் செயலி வாயிலாக மேற்கொள்ளும் பணியை சோதனை அடிப்படையில் மின்சார வாரியம் நடத்தி வருகிறது.

தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள், வீடுகள்தோறும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மின் பயன்பாடு கணக்கெடுப்புக்கென மின்வாரியம் சார்பில் தற்போது ‘எச்.எச்.சி’ எனும் கையடக்க கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மின் பயன்பாட்டு கணக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கவும், நுகர்வோர்களுக்கு மின் கட்டண விவரத்தை உடனடியாக தெரிவிக்கும் வகையிலும், மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு பணியை செல்போன்கள் மூலம் மேற்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் திட்டமிட்டது.

இதற்கென தமிழ்நாடு மின் வாரியம் தனி செயலி ஒன்றையும் உருவாக்கி உள்ளது. முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள மின்வாரியத்தின் சென்னை, காஞ்சீபுரம், கோவை, ஈரோடு, மதுரை உள்பட 12 மண்டலங்களை சேர்ந்த சில மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் மூலம் இந்த செயலியை பயன்படுத்தி செல்போன் மூலம் மின் அளவீடு செய்யும் சோதனை அடிப்படையிலான பணிகளை மின் வாரியம் மேற்கொண்டது.

இந்த நிலையில், செல்போன் செயலி மூலம் மின் அளவீடு செய்யும் சோதனை அடிப்படையிலான பணிகளை தமிழகம் முழுவதும் மின்வாரியம் துரிதப்படுத்தி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள் இந்த செயலியை பதிவேற்றம் செய்து, வீடுகளில் மின் அளவீடு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரத்யேக ‘புளூடூத்’ கருவி மூலம் மீட்டர் கருவி மற்றும் செல்போன் இடையே இணைப்பை ஏற்படுத்தி, ஒவ்வொரு வீடுகளின் மின் பயன்பாடுகளும் தற்போது சோதனை முறையில் கணக்கிடப்பட்டு வருகிறது.

இந்த புதிய முறை காரணமாக, மின் பயன்பாடு யூனிட் அளவீடுகளில் எந்தவித முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெறாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மின் வாரிய உதவி என்ஜினீயர்கள் கூறுகையில், ‘செல்போன் மூலம் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணி சோதனை ஓட்டம் முறையில் நடந்து வருகிறது. பெரும்பாலான பணியாளர்கள் இதில், சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளனர். இந்த புதிய முறையால், மின் பயன்பாட்டில் எந்தவித மாற்றங்களையும் யாராலும் மேற்கொள்ள முடியாது. அரசுக்கும் சரியான வருவாய் கிடைக்கும்’ என்றனர்.

சோதனை அடிப்படையிலான இந்த பணிகள் குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது:-

செல்போன் மூலம் வீடுகளில் மின் அளவீடு கணக்கெடுக்கும் பணி சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, பணியாளர்களின் செல்போன்களையே பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளார்கள். இது நல்ல திட்டம்தான். ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்தும்போது பணியாளர்களுக்கு அதற்கான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். இந்த பணிக்காக பணியாளர்கள் தங்களது செல்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால், அவை செயலிழந்துவிடுகின்றன. மேலும், வீடுகளில் வைக்கப்படும் மீட்டர் பெட்டிகள் உயரத்திற்கு ஒரு நிலையான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *