கீவ், மார்ச் 28–
செர்னோபில் அணுமின் நிலையத்துக்கு ரஷ்ய படைகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து நடைபெற்ற செர்னோபில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதியை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ளன.
இதுகுறித்து உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள விலக்கு மண்டலத்தை ராணுவ மயமாக்குகின்றன. எனவே செர்னோபில் நிலையத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும். அணு உலையை சேதப்படுத்துவதால் உக்ரைனில் மட்டுமல்ல, மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், வளிமண்டலத்தில் கணிசமான அளவு கதிரியக்க தூசியை வெளியிட வழிவகுக்கும்.
ஆனால், ரஷ்யா இதன் பெரும் ஆபத்தை உணராமல், அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்து ஆயுதங்களைக் கொண்டு செல்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.