சிறுகதை

செருப்புத் திருடன்! |செ.செந்தில்மோகன்

நீண்ட தெருவின் முடிவில் ஒரு திருப்பம்…அதற்கு முன் வலதுபுறம் வசந்த விநாயகர் கோவில்..

கோவிலை அடுத்து ஒரு வீடு. அந்த வீட்டில் கோகிலாம்மாவும் அவரது கணவர் மூர்த்தியும்..

அவர் ரிடையர்டு பொதுப்பணித் துறை பொறியாளர்.

பெண்ணை கட்டிக் கொடுத்தாச்சு..

பையன் விக்னேஷ் .. சென்னையில் விஸ்காம் படித்துவிட்டு, ஒரு இயக்குனரிடம் வேலை செய்கிறான்.

விநாயகர் கோவிலுக்கு பெரிதாக கூட்டம் எதுவும் வராது.

அந்த ஏரியாவாசிகள்தான் வந்து போவார்கள்.

வெள்ளி, செவ்வாய் மட்டும் காலையும் மாலையும் பூஜை நடக்கும்..

இரண்டு மணி நேரம் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.

கோயிலுக்கு வெளியே ஒரு பூக்கடை…’சின்ராசுதான் ஸ்டூல் மேல உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டிருப்பான்’.

ஒரு நாள், பின் தெருவில் குடியிருக்கும் மரகதம்மாள்தான் கோயிலில் இருந்து வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு..

புலம்பிக் கொண்டே போனாள்!

‘அடுத்த வாரம் அதே போல மருந்துக்கடை வைத்திருக்கும் கோபாலனும்…’அதே போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

ஏமாற்றத்தோடு தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிப்போனார்.

‘ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த இஞ்சினீயர் மூர்த்தி…’

எதையும் கண்டுகொள்ளாது, ஹாலுக்கு போய் டி.வியை ஆன் பண்ணிவிட்டு..

சோபாவில் அமர்ந்துகொண்டார்.

அப்படித்தான் அதற்கடுத்த வாரத்தில் ஒரு நாள்..”சங்கடஹர சதுர்த்தியன்று கோவிலில் நல்ல கூட்டம்”..

மாலை நேரம்..மக்கள் பூஜைக்கு வந்துகொண்டே இருந்தனர்.

பூக்கடை பொதுவாக மற்ற நாட்களில் ..வெறிச்சோடிக் கிடக்கும்.

இன்று நல்ல வியாபாரம்.

சின்ராசு பிஸியாக இருந்தான்.

பூஜை முடிந்து கூட்டம் கூட்டமாக. பக்தர்கள் வெளியேவந்துகொண்டிருந்தார்கள் .

நகருக்குள் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் முரளிதரனும்…அவரது பார்ட்னருமான தங்கப்பாண்டியும் வெளியே வந்தனர்.

செருப்பை கழட்டி வைத்த இடத்தில்..தங்கப்பாண்டி

‘சுற்றும் முற்றும் பார்ப்பதைக் கண்ட முரளி..’ என்னப்பா என்றார்.

செருப்பை காணோம் நண்பா என்றவாறே..துழாவிக் கொண்டிருந்தார் தங்கப்பாண்டி!

‘அட… போன மாசமும் இப்படித்தாம்பா என் செருப்பும் தொலைந்து போனது..’ என்றார் முரளிதரன்.

நேத்துதான் நண்பா வாங்கினேன்.

காஸ்ட்லி செருப்புயா…என புலம்பிக்கொண்டே…

பூக்கடை சின்ராசுவிடம் கேட்டார்…

ஏம்ப்பா…இங்கே கழட்டி வைத்த செருப்பை காணோமே..

“நீ ஏதும் பார்த்தியா?”..என்று!

இல்லை சார் ..பார்க்கலை எனச் சொல்லிவிட்டு..’தமது வேலையில் மும்முரமாக இருந்தான்..சின்ராசு’.

தங்கப்பாண்டிக்கு விலை அதிகமான செருப்பு என்பதால் கோபம் தலைக்கேறியது..

ஏன்டா…இங்க..நீ ஒருத்தன்தான இருக்க?

“கேட்டா..தெரியாதுங்கற..” என்றார்.

சார்..எனக்கெப்படி சார் தெரியும்!

“என் வேலையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு” ..என்றான் சின்ராசு.

உடனே முரளிதரனும்..”இல்லப்பா இங்கே யாரோ வேணும்னேதான் இதைச் செய்றாங்க..

போன மாசம் என் செருப்பும் தொலைஞ்சுபோச்சு..என கோபமாக கத்தவும்..

சார்…நான் எடுத்து வச்சுகிட்ட மாதிரி பேசறீங்க…என சின்ராசு சொல்லவும்..

மடாரென்று கீழே இழுத்துப்போட்டு ‘சொல்லுடா…திருட்டுப்பயலே..

ஆள் வச்சு திருட்றியா…’என

ஆவேசமாக தாக்க ஆரம்பித்துவிட்டார் தங்கப்பாண்டி!

எல்லோரும் ஓடி வந்தாலும்..”இவர்களின் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையை பார்த்து..” யாரும் அருகே வரவில்லை.

அப்போதுதான் சத்தம் கேட்டு..வெளியே வந்து பார்த்தாள், கோகிலாம்மா.

சின்ராசு..தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.

கோகிலாதான் ஓடிப்போய்..தன் வீட்டு காம்பவுண்டு சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருந்த..

“அவனது ஊன்றுகோலை எடுத்துக் கொடுத்தபடியே…”

பாருங்க…அவன் நடக்க முடியாதவன்…நல்ல பையன்!

ஆறு மாசமா இங்கதான் பூக்கடை வச்சிருக்கான்..

காலையில் வந்தால் வண்டியை எங்க வீட்டு வாசல்லதான் வைப்பான்.

வியாபாரம் முடியாம கீழே இறங்கமாட்டான்!

அவனைப்போய் சந்தேகப்பட்டு அடிச்சுட்டீங்களே..என்றதும்

முரளிதரன்…’சரி வா ..பாண்டி…..போகலாம்’ என

தனது பார்ட்னரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

ஒரு நாள் கோகிலாம்மா வீட்டு வாசலில் புதுக் கார் ஒன்று வந்து நின்றது.

ஹாரன் சத்தம் கேட்டு..வெளியே வந்து பார்த்தார் மூர்த்தி!

“அட..நம்ம பையன் விக்கிதானா..”

வா..வா..என கதவைத் திறந்துவிட்டு,

கோகீ…நம்ம விக்கிதான் வந்திருக்கான்…என்றார்.

விக்னேஷ் உள்ளே வந்ததும்..அடுப்படியில் இருந்து கையை துடைத்துக்கொண்டே..

வாப்பா…போன்கூட பண்ணாம திடீர்னு வந்திருக்க…என மகனை பார்த்து கேட்கவும்..

“உம் மகன் கார்ல வந்திருக்கான்டீ..” என்றார் மூர்த்தி!

உடனே..விக்னேஷ்..ஆமாம்மா..எனக்கு புது படம் ஒன்னு புக்காகியிருக்கு..

பெரிய பேனர் தயாரிப்பு..

நல்லா வரும்மா..அட்வான்ஸா ஒரு பெரிய தொகை கிடைச்சுது…

அதான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு…சொல்லாம புதுக் காரை வாங்கிட்டு வந்தேன்..என்றான்!

“சந்தோசம்ப்பா…நல்லாரு! என வாழ்த்திவிட்டு” –

என்ன படம் பேரு விக்கீ என கேட்டாள்.

பளிச்சென்று யோசிக்காமல் சொன்னான் விக்னேஷ்..” செருப்புத் திருடன்” மா..என்று!

நாயகன் திருடன் கிடையாது…

“ஆனா செருப்பை பார்த்தால்..”எடுத்துக்கொண்டு வந்துவிடுவான்.

அது ஒரு வியாதிம்மா…அதனால ஏற்படும் குழப்பம்தான் கதையே…

என சொல்லிக்கொண்டே போக..

கோகிலாவிற்கு சுரத்தே இல்லை..

ஓ..அப்படியா?..ஏம்பா வேற பேரு கிடைக்கலையா..என்றாள்.

மூர்த்தி மெல்ல எழுந்து ரூமிற்குள் நழுவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *