சிறுகதை

செய்வதை திருத்தமாக செய் | துரை சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் – 16

செய்வன திருந்தச் செய்

(விளக்கம்: செய்யும் செயல்களை அரைகுறையாக செய்யாமல் திருத்தமாக செய்ய வேண்டும்)

* * *

 

அம்மா அண்ணனைப் பாருங்க அடிக்கிறான்.

அம்மா நான் அடிக்கலை. அவள் பொய் சொல்றா….

குழந்தைகள் மாறி மாறி கத்திக் கொண்டு இருந்தனர்.

ஞாயிற்றுக் கிழமை பள்ளி விடுமுறை என்பதால் 4ம் வகுப்பு படிக்கும் நிதிஷ் – 3ம் வகுப்பு படிக்கும் தனது தங்கை ரோகினியுடன் வீட்டில் இருந்த பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவர்கள் இரண்டு பேரும் விளையாட்டாக சண்டை போடத் தொடங்கினர்.

திடீரென நிதிஷ் தனது தங்கையை அடித்தான்.

இதனால் அவள் அம்மாவிடம் அண்ணன் அடிப்பதாக கத்தினாள்.

நிதிஷ் தான் அடிக்கவில்லை என்று பதிலுக்கு கத்தினான்

அவர்களின் சத்தம் கேட்டதும் வீட்டு சமையல் அறையில் இருந்த தாய் சுகன்யா, டே இரண்டு போரும் சண்டை போடாமா விளையாட மாட்டேங்களா என்று ஒரு அதட்டல் போட்டாள்.

அம்மாவின் சத்தம் கேட்டதும் குழந்தைகள் இரண்டு பேரும் அமைதியானார்கள்.

அப்போது கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குள் வந்த தந்தை முத்து, குழந்தைகள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டிருப்பதை பார்த்ததும் டே இரண்டு பேரும் அமைதியா ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாட மாட்டேங்களே என்று செல்லமாக அதட்டல் போட்டார்.

தந்தையின் அதட்டல் சத்தத்தை கேட்டதும் ரோகினி வேகமாக சமையலறைக்குள் சென்றாள்.

நிதிஷ் வீட்டு சோபாவில் போய் அமைதியாக உட்கார்ந்தான்.

விளையாட்டு சாமான்கள் வீடு முழுவதும் பரவிக் கிடந்தன.

முத்து தனது மகன் நிதிஷை அந்த பொம்மைகளை எடுத்து ஒழுங்காக வைக்க சொன்னார்.

பாப்பா தான் பொம்மையை தூக்கி வீசினாள், அவளை எடுத்து வைக்க சொல்லுங்க என்றான்.

இரண்டு பேரும் சேர்ந்து எடுத்து வையுங்கள் என்று கூறிய முத்து, சமையல் அறையில் இருந்த ரோகினியை அழைத்தார்.

வேகமாக அங்கு வந்த குழந்தை ரோகினி தனது அண்ணனுடன் சேர்ந்து சிதறி கிடந்த பொம்மைகளை எடுத்து வைத்தாள்.

அப்போதும் நிதிஷ் விளையாட்டு தனமாக பொம்மைகளை தூக்கி எறிந்தான்.

அதை பார்த்த ரோகினி அப்பா அண்ணன் பொம்மையை தூக்கி போடுறான் என்று தனது தந்தையிடம் புகார் கூறினாள்.

உடனே முத்து, நிதிஷ்… செய்ற வேலையை திருந்த செய்யனும்.

அங்க பாரு… சின்ன குழந்தை எவ்வளவு அழகா எடுத்து வைக்குது… எந்த வேலையை செய்தாலும் திருத்தமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

நிதிஷும் வேக வேகமாக பொம்மைகளை அடுக்கி வைத்து விட்டு சமையல் அறைக்குள் ஓடினான்.

அங்கு சுகன்யா மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள்.

தாயின் சேலையை பிடித்துக் கொண்டு செல்லமாக அவளை இழுத்த நிதிஷ், அம்மா என்ன சாப்பாடு என்று கேட்டான்.

உனக்கு பிடித்த சிக்கன் குழம்பும் முட்டையும் வச்சிருக்கேன் என்று சுகன்யா கூறினாள்.

உடனே அம்மா எனக்கு… என்று ரோகினியும் செல்லமாக கேட்டாள்.

உனக்கும் தாண்டி செல்லம் என்று அவளையும் தூக்கி கொஞ்சினாள் சுகன்யா.

நீங்க போய் அப்பா கிட்ட சமத்தா உட்கார்ந்து டி.வி. பாருங்க… அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடு தயார் செய்து உங்களை கூப்பிடுறேன் என்று கூறி அவர்கள் இரண்டு பேரையும் அனுப்பி வைத்தாள்.

அம்மாவின் பேச்சை கேட்ட குழந்தைகள் இரண்டும் ஓடி வந்தது.

ரோகினி டி.வி. பார்த்துக் கொண்டிருந்த தனது தந்தையின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டு, அவர் வைத்திருந்த டி.வி. ரிமோட்டை பறித்து, தனக்கு பிடித்த ‘‘சோட்டா பீம்’ பார்க்கத் தொடங்கினாள்.

முத்துவும் தனது மகளின் தலையை தடவிக் கொடுத்தான்.

வேகமாக வந்த நிதிஷ் ரோகினியிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயன்றான். அவள் கொடுக்க மறுத்தாள்.

உடனே முத்து… இரண்டு பேரும் அமைதியா டி.வி பாருங்கள் என்று ரிமோட்டை வாங்கி வைத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் மதிய உணவு தயாரானது.

சுகன்யா, தனது குழந்தைகளை அழைத்து சாப்பிட தட்டு மற்றும் தண்ணீர் எடுத்து வைக்கும்படி கூறினாள்.

குழந்தைகள் இரண்டு பேரும் வேகமாக தனது அம்மாவிடம் சென்றனர்.

ரோகினி தண்ணீர் டம்ளர் ஒன்றை தூக்கினாள்.

நிதிஷ் மற்றொரு தண்ணீர் டம்ளரை தூக்கினான்.

ரோகினி அதை பத்திரமாக எடுத்துச் சென்றாள்.

ஆனால் நிதிஷ் தண்ணீரை கீழே கொட்டிக் கொண்டே சென்றான்.

இதை பார்த்த முத்து அவனை பத்திரமாக எடுத்து வர சொன்னார்.

என்னடா இவன் இந்த வயதில் இப்படி எந்த வேலையையும் சரி செய்யாமல் அரைகுறையாக செய்றானே… இப்படியே போன எதிர் காலத்தில் கஷ்டமாகிடுமே…. இவனை திருத்தனுமே என்று மனதிற்கு யோசித்தார் முத்து.

சிறிது காலம் நிதிஷின் நடவடிக்கையை கவனித்தார் முத்து.

அவன் எந்த பொருளை எடுத்தாலும் அதை திரும்ப எடுத்த இடத்தில் வைப்பது கிடையாது. சில பொருட்களை கையாளும் போது அதை உடைத்து விடுவது. பள்ளிக்கு சென்று விட்டு வரும் போது புத்தகத்தை பள்ளியிலே விட்டு விட்டு வருவது, டிபன் பாக்ஸை விட்டுவிட்டு வருவது என்று எந்த வேலையானாலும் கவனம் இல்லாமல் ஏனோ தானோ என்றே செய்து கொண்டு இருந்தான்.

ஒரு நாள் வீட்டில் வண்ண மீன்கள் வளர்க்கும் பாட்டிலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்ற நிதிஷ் அதை கீழே போட்டு உடைத்து விட்டான்.

இதனால் அதில் இருந்து மீன்கள் தரையில் விழுந்து அவன் கண் எதிரே துடி துடித்து இறந்தன.

தான் செய்த தவறால் மீன்கள் இறந்துவிட்டது என்பதை உணர்ந்த நிதிஷ் வருத்தம் அடைந்தான்.

இதை கேள்விப்பட்ட முத்துவுக்கு நிதிஷ் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.

இருந்தாலும் அவனை திட்டவில்லை. இந்த தவறுக்கு அஜாக்கிரதையே காரணம் என்பதை அவனுக்கு உணர்த்தினார்.

எதிர் காலத்தில் மகன் நிதிஷ் இதே போல் இருந்தால் அவன் கஷ்டப்படுவான் என்பதை உணர்ந்த முத்து, தனது மனைவியின் துணையுடன் அவனுக்கு அதை புரிய வைக்க நினைத்தார்.

தினமும் வீட்டில் சின்ன சின்ன வேலைகளை குழந்தைகள் இரண்டு பேருக்கும் கொடுத்தனர்.

ரோகினி அந்த செயலை சரியாக செய்தாள்.

நிதிஷ் எப்போதும் போல் அந்த செயலை அரைகுறையாக செய்தான்.

கணவனும் மனைவியும் நிதிஷ் செய்யும் வேலைகளை சுட்டிக்காட்டி அவனுக்கு எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தனர்.

நாட்கள் செல்ல செல்ல நிதிஷின் செயல்கள் மாறியது. அவன், தான் செய்யும் வேலையை திருத்தமாகவும் சரியாகவும் செய்யத் தொடங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *