நியூயார்க், பிப். 18–
புளோரிடாவில் செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நபருக்கு, காவல் துறை சார்பில் ரூ.100 கோடி இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ராபர்ட் டுபோயிஸ் என்பவர், உண்மை நிரூபிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 19 வயதில் உள்ளே சென்று 56 வயதில் விடுதலை ஆகி வாழ்க்கையை தொலைத்தவருக்கு ரூ.100 கோடி இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.
சம்பவத்தின் போது 18 வயது இருந்த டுபோயிஸ் 19 வயதுடைய பார்பரா கிராம்ஸ் என்பவரை கற்பழித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இன்னசன்ஸ் ப்ராஜெக்ட் அமைப்பின் உதவியால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வழக்கறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ரூ.100 கோடி இழப்பீடு
2020 ஆம் ஆண்டில் இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ சான்றுகள் மூலம் அமோஸ் ராபின்சன், அப்ரோன் ஸ்காட் ஆகியோர்தான் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், டுபோயிஸ் விடுவிக்கப்பட்டார். பின்னர் தவறான குற்றத்திற்கு தண்டனை அனுபவித்ததற்கு எதிராக தம்பா நகர் காவல் நிலையம் மீது டுபோயிஸ் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் மூலம், செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததற்காக ரூ.100 கோடி ரூபாய் இழப்பீடாக தம்பா நகர கவுன்சில் வழங்க உள்ளது.
இதுகுறித்து ராபர்ட் டுபோயிஸ் கூறும்போது, ‘நான் ஒவ்வொரு நாளும் கடவுளிம் பிராத்தித்தேன். விடுதலையை எதிர்ப்பார்த்தேன். தற்போது நீதி கிடைத்துவிட்டது. உண்மையான இதயமுள்ளவர்கள் உள்ளனர். இது ஆச்சர்யமாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.