கதைகள் சிறுகதை செய்திகள்

செயல்..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

“இதுல எவ்வளவு பணம் இருக்குன்னு பாரு ? “

என்று ஆறுமுகத்திடம் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கொடுத்தார் மாசிலாமணி.

“இந்தா ஒரு நிமிஷம் “

என்று சொன்ன ஆறுமுகம் அவ்வளவு பணத்தையும் எண்ண ஆரம்பித்தார்.

” ரெண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் இருக்கு “

என்று ஆறுமுகம் சொல்ல

” என்னது ரெண்டு லட்சத்து இருவது ஆயிரம் தான் இருக்கா ?”

” ஆமா “

” இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் இல்லையா ? இங்க கொடு”என்று பணத்தை வாங்கிய மாசிலாமணி மறுபடியும் எண்ணினார்.

ஆறுமுகம் சொன்னது போலவே ரெண்டு லட்சத்து இருபதாயிரம் மட்டும் தான் இருந்தது .

“நான் தான் தப்பா எண்ணிட்டேன் போல என்று மறுபடியும் முப்பதாயிரம் ரூபாய் சேர்த்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்தை ஆறுமுகத்திடம் கொடுத்தார் .

” இப்ப இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்”

” ஆமா” என்றார் ஆறுமுகம் .

“சரி உங்களுக்கு கோபால தெரியுமா?

” நல்லாத் தெரியுமே? “

” அப்படியா ? எப்படி தெரியும்?

” நான் அங்கங்க பார்த்து இருக்கேன். எனக்கு கோபால் ஐயாவை ரொம்ப நல்லாவே தெரியும் “

என்று மீண்டும் அழுத்தந்திருத்தமாகச் சொன்னார் ஆறுமுகம்.

” அப்படியா? சரி பணத்தை கொடுங்க”

என்று அந்த இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்தை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் மாசிலாமணி

தன்னிடம் இவ்வளவு பணத்தைக் கொடுத்து மறுபடியும் நம்மிடமிருந்து வாங்கிக் கொண்டரே ? அதுவும் கோபால் ஐயாவை தெரியும்ன்னு தானே சொன்னேன்? இது குற்றமா? நான் ஒன்னும் திருடன் இல்லையே? எதுக்கு கொடுத்த பணத்தை நம்ம கிட்ட இருந்து மாசிலாமணி வாங்கினார் ” என்று ஆறுமுகத்திற்கு ஒரே குழப்பமாக இருந்தது.

” சரி நம்ம மேல நம்பிக்கை இல்லை போல ” என்று விட்டுவிட்டார் ஆறுமுகம்.

கிருஷ்ணனை அழைத்தார்.

” கிருஷ்ணா ,உங்களுக்கு கோபால் ஐயாவைத் தெரியுமா ? “.என்று கிருஷ்ணனிடம் கேட்டார் மாசிலாமணி

” யார் அவர் ? எனக்கு அவர் யாருன்னே தெரியாது ?”

என்றார் கிருஷ்ணன்.

“ஓ… சரி , அப்பிடின்னா, அவர் கையில் இந்த இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவ கொடுத்திருங்க “

என்று கிருஷ்ணரிடம் பணித்தார் மாசிலாமணி .

“சரி “

என்று சொன்ன கிருஷ்ணன் பணத்தை எடுத்துக் கொண்டு கோபாலிடம் கொடுத்தார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு ஒரு மாதிரியாக இருந்தது. இவ்வளவு நாள் நம்ம மாசிலாமணி ஐயா கூட பழகியிருக்கோம். இந்த ரெண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நம்மள நம்பலயே ? ” என்று வருத்தப்பட்டார் ஆறுமுகம்.

இதை மனதில் வைத்துக் கொள்ளாமல் ,

ஒரு நாள் மாசிலாமணியிடம் கேட்டுவிட்டார் .

” ஐயா நான் அவ்வளவு தப்பான ஆளா ?

என்று மாசிலாமணியிடம் கேட்டார், ஆறுமுகம்

இதைச் சற்றும் எதிர்பார்க்காத மாசிலாமணி

ஏன், இப்படி நம்மிடம் கேட்கிறார் ? என்று நினைத்துக் கொண்டார்.

“ஐயா என்கிட்ட பணத்தை கொடுக்காம கிருஷ்ணன் கிட்ட ஏன் கொடுத்து அனுப்புனீங்க ? நான் திருடுவேன்னு நினைச்சீங்களா?”

என்றார் ஆறுமுகம்

” அடடா… தப்பு … தப்பு… நான் அப்படியெல்லாம் நினைக்கல ஆறுமுகம் ” என்று ஆதரவாக அவர் தோளைத் தொட்ட மாசிலாமணி,

” உங்களுக்கு கோபால் ஐயாவை தெரியும்னு சொன்னிங்க . அதுனால தான் வேண்டான்னு சொன்னேன். இப்போ அவர் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறாரு. என்கிட்ட உதவி கேட்டார். கோடிக்கணக்கா சம்பாதிச்ச மனுஷன் இப்போ குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாம நொடிச்சு போய் உட்கார்ந்து இருக்கிறாரு. நீங்களும் அவரை நல்லா தெரியும்னு சொன்னீங்க. ஒருவேளை நீங்க பணம் கொடுக்கும் போது அவர் மனசு கஷ்டப்படும். அதான் தெரிஞ்ச உங்ககிட்ட அவருக்கு பணம் கொடுக்க சொல்றத விட, தெரியாத கிருஷ்ணனை கூப்பிட்டு அவருக்கு பணத்தை கொடுத்துட்டு வர சொன்னேன். இது தப்பா ஆறுமுகம்? “

என்று மாசிலாமணி சொன்னபோது

‘ஐயா… இது தெரியாம நான் ஏதேதோ பேசிட்டேன் . என்னைய மன்னிச்சிடுங்க ” என்றார், ஆறுமுகம்

“நாம யாருக்கு என்ன உதவி செஞ்சாலும், அது மத்தவங்களுக்கு உதவியா இருக்கணுமே தவிர, உபத்திரமா இருக்க கூடாது” என்று மாசிலாமணி சொல்ல, அதற்குப் பதில் சொல்ல முடியாமல் கண் கலங்கினார் ஆறுமுகம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *