என்னப்பா…கொஞ்சம் கவனமாக இருந்திருக்கக் கூடாதா? இப்படி அடிபட்டுட்டீங்களே…
என்ற இனியனின் அன்பான கண்டிப்பைக் கேட்டு, தனது வலியையும் மறந்து உள்ளம் மகிழ்ந்தார் வைரமணி.
கழிவறைக்கு சென்ற போது அங்கிருந்த ஈரம் காரணமாக கால் சறுக்கியதால் தனது கால் லேசாக மடிந்து முழங்கால் சுவரில் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட வலியில் கொஞ்சம் துவண்டுதான் போனார் வைரமணி.
அவர் அடிபட்டதை அறிந்த இனியன், துடித்துப்போய் உடனே ரத்தம் கட்டிவிடாமல் இருக்க மருந்து தேய்த்து விட்டபோதுதான் அப்பாவை அன்போடு கண்டித்தான். மருந்து தடவியதால் இதமடைந்த வைரமணி பழைய நினைவுகளில் மூழ்கினார்.
இனியன் தனது சின்ன வயதில் விளையாடும்போதும் மிதிவண்டி ஓட்டும்போதும் எங்கேயாவது விழுந்து காயத்தோடு வருவான். அப்போது, ஏம்ப்பா…கொஞ்சம் பார்த்து விளையாடக்கூடாதா? என்று கேட்டு மருந்து தடவி விடுவதை எண்ணிப் பார்த்தார்.
அப்போதெல்லாம் நான் வேணும்னாப்பா விழுந்து காயப்படுத்திக்குவேன். தெரியாமத்தான் நடந்தது என்று பள்ளிச் சிறுவனாக இருந்த இனியன் பதில் கூறுவதைக் கேட்டு ரசிப்பார் வைரமணி.
உண்மைதானே… யார்தான் வேண்டும் என்று காயப்படுத்திக்கொள்வார்கள். கவனத்தை மீறி நடந்து விடுவதுதானே விபத்து…என்றெல்லாம் எண்ணி மகனின் பதிலால் பெருமைப்பட்டுக் கொள்வார்.
ஆனால் இப்போது இனியன், நாம் சொன்ன அதே அறிவுரையை நமக்கு கூறுகிறான்… என்று எண்ணிவாறே, கால மாற்றம் எத்தனை விரைவாக ஏற்பட்டு விடுகிறது என மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
80 வயதை கடந்துவிட்டார் வைரமணி. அவருடைய மகன் இனியனுக்கே இப்போது 45 வயது ஆகிவிட்டது. இனியனோடு சேர்ந்து வைரமணிக்கு ஒரு பெண் உள்பட 4 பிள்ளைகள். அனைவரும் மணமாகி வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.
தன் இளைய மகன் இனியனோடு இருப்பது வைரமணிக்கு வசதியாக இருந்தது. மருமகள் பேரரசி, தன் ததையைப் போல் எண்ணி மிகுந்த அக்கறையோடு மாமனாரைப் பார்த்துக்கொள்வாள்.
இனியனின் மகள் வெண்பா 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள்.
மாலை வேளைகளில், பணி முடிந்து வரும் இனியன், தனது தந்தையோடு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உரையாடுவதில் மகிழ்ச்ச்சி அடைவான். அரசியல், சமூகம், விளையாட்டு, திரைப்படம் என எதைப்பற்றியும் இரண்டு பேரும் விவாதித்தால், நேரம் போவதே தெரியாது. சில வேளைகளில் குடும்பத்தினரும் அதில் கலந்து கொள்வார்கள்.
தனது அலுவலகத்திற்கு சென்ற இனியன், மாலையில் வீட்டுக்கு வந்ததும், ‘அப்பா…இப்போ வலி எப்படி இருக்கு’ என வினவினான்.
“இப்ப வலி சுத்தமா இல்லப்பா…உடனே மருந்து போட்டதால, வலி சுத்தமாக போயிடுச்சி…” என்றார் வைரமணி.
இரவில் சாப்பிட்டுவிட்டு அப்பாவுடன் அமர்ந்த இனியனிடம் “அலுவலகம் எப்படிப்பா போச்சு” என்றார் தந்தை.
“இன்னைக்கு அலுவலகத்தில் நண்பன் கபிலனோட ஒரு விவாதம்பா…” என்ற இனியன்,
அது என்னன்னா… “அப்பாவா..தன் குழந்தைகளை பார்த்துகறதுக்கும் அப்பாவை பார்த்துகறதுக்கும் மனிதர்களிடம் வேறுபாடு இருக்குன்னு சொன்னான்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லைன்னு சொன்னேன்…நீங்க என்னப்பா சொல்றீங்க…என்றான் இனியன்.
“அது உண்மைதாம்பா… தன் குழந்தைக்கு வரும் பாதிப்பை கண்டு துடிக்கும் அளவுக்கு தனது அப்பா, அம்மாவுக்கு வரும் துன்பத்தைக் கண்டு மனிதர்கள் துடிப்பதில்லை என்பது நடைமுறை உண்மைதான்.
எடுத்துக்காட்டாக தன் குழந்தைக்கு ஒரு காய்ச்சல்னா உடனே மருத்துவமனைக்கு கூட்டிட்டு போவாங்க… ஆனா, அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ காய்ச்சல்னா மாத்திரை மருந்து வாங்கிக்குடுத்து பார்த்து, சரியாகலன்னாதான் பெரும்பாலும் 2 நாள் கழிச்சி கூட்டிட்டு போவாங்க…இது இயல்புதான்…” என்றார்.
“என்னப்பா நீங்களும் அப்படி சொல்றீங்க…” நான் உங்களையோ அம்மாவையோ அப்படியா பாத்துகிட்டேன்…” என கேட்டான் இனியன்.
“நீ அப்படின்னு சொல்லலியே இனியா…பொதுவான மனிதர்களின் இயல்பு அதுதான்னுதானே சொல்றேன். அதைக்கூட உளவியல் நிலையில் பார்த்தால் தப்பு சொல்ல முடியாது… ஒரு தந்தை, தன் குழந்தையை பிறந்த நாள் முதல் பார்த்து வர்றான். அதனால, கைக்குழந்தையா இருக்கும்போது இருந்து பார்ப்பதால, அந்த குழந்தைக்கு ஒன்னும் தெரியாதே என்பதால் பெற்றோரே எல்லாத்தையும் கவனிக்க வேண்டி வருது… அதன் தொடர்ச்சியா, கொஞ்சம் வளர்ந்த பிறகும் அப்படியே கவனிக்கிறாங்க…
ஆனா தனது தந்தையையோ, தாயையோ இவர்கள் சம்பாதிக்கும்போது, பெரியவங்களாகவேதானே பார்க்கிறாங்க…எடுத்துக்காட்டா…நீ வெண்பாவ கைக்குழந்தையில் இருந்து பார்க்கிற… என்னை நீ கவனிச்சிக்க வேண்டிய சூழல் எனக்கு வயதான பிறகுதானே உனக்கு ஏற்படுது. அதனால எப்படி இரண்டையும் நீ ஒன்னா பார்க்க முடியும்…அந்த வேறுபாடுதாம்பா அது… அதைதான் பிளாட்டோ சுயநலம்னு சொல்றார்..அது தப்பில்லைன்னுதான் நான் சொல்லுவேன்…”என்றார் வைரமணி.
அப்போது அங்கு பேரரசியுடன் வந்து சேர்ந்த வெண்பா…. “தாத்தா… என் தோழிகள் வீட்டில் உள்ள தாத்தா பாட்டியில…ஒரு சிலர் நல்லா உடல்நலத்தோட இருக்காங்க…சிலர் சீக்கிரமாவே நோயாளியா ஆகி இருக்காங்களே…அது ஏன் தாத்தா?…என்று வினவினாள்.
அதனைக் கேட்ட இனியன் “ஒருவர் வயதாவதும் இளமையா இருப்பதும் அவரவர் உள்ளத்தளவில்தான் வெண்பா இருக்கு… எனக்கு வயசாயிடுச்சி… என்னால வேலை செய்ய முடியாதுன்னு நினைச்சா…அவர்கள் மனம் நம்புவது மாதிரியே தளர்வடையத்தான் செய்வாங்க…”என்றான் .
அப்பா…நான் தாத்தாட்டதானே கேட்டேன்… நீங்க ஏன் சொல்றீங்க…நீங்க சொல்லுங்க தாத்தா என்று சிணுங்கினாள் வெண்பா…
“உங்க அப்பா சொல்றது உண்மைதான் வெண்பா…’’என்ற வைரமணி,
பொதுவாவே வயது கூடுலாக ஆகும்போதுதான் தன்னால முடிஞ்ச எல்லா வேலையையும் செய்யணும்….அதைவிட்டுட்டு, அந்த வேலையைச் செய்ய ஆள் இருக்குன்னோ, தன்னால முடியாதுன்னோ, நாமதான் காலமெல்லாம் வேலை செஞ்சிட்டமே, இனியும் ஏன் வேலை செய்யணும்னு பெரியவங்களா ஆகும் போது அவங்களும் நினைக்கக்கூடாது. அவங்க வீட்ல உள்ளவங்களும் வேலை செய்யாம சும்மா இருக்க விடக்கூடாது. அவங்களுக்கு பிடித்த, அவர்களால் முடிந்த ஏதோ ஒரு வேலையை செஞ்சிட்டே இருந்தாதான்…உடல் நலத்தோட நீண்ட நாள் இருக்க முடியும்…என்றார் தாத்தா வைரமணி.
“அப்போ…அவங்க காலம் முழுவதும் வேலை செய்யணுமா மாமா… இது அநீதி இல்லையா? நல்லா சம்பாதிக்கற வரையில் வேலை செஞ்சிட்டு ஓய்வெடுக்க வேணாமா?…” என்றாள் பேரரசி.
“உடம்புல இருக்கிற இதயமும் நுரையீரலும் ஓய்வெடுக்கணும்னு நினைச்சா…எப்படியோ… அப்படித்தான் பேரரசி இதுவும். ஒரு மனிதன் மூச்சு விடும்வரையில் தன்னால முடிஞ்ச ஏதோ ஒரு வேலையைச் செஞ்சிசிட்டுதான் இருக்கணும். அதிலும் தனக்கு பிடித்தமான வேலையை தேர்ந்தெடுத்து செஞ்சிட்டு இருந்தா… உடல் நலத்தோடு நீண்ட நாள் வாழ முடியும். ஒரு மனிதனுக்கு கடமை இருக்கும் வரையில் அந்த மனிதனுக்கு முதுமை ஏற்படாது. அனதால தனக்கான கடமைகளை கடைசி நாள் வரை வைத்திருந்தா…120 ஆண்டுகள் வாழ்வதுகூட எளிமையான ஒன்னாதான் இருக்கும் என்றார் வைரமணி.
“ஆனாலும் முதுமையில் உள்ளவங்களை, குழந்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தோட…, குழந்தைகளை பாதுகாக்கிற மாதிரியே வயதானவர்களை கூடுதலா அரசுத் திட்டங்கள் மூலமா கவனிச்சிகிட்டா நல்லாதானேப்பா இருக்கும்”என்றான் இனியன்.
“ஆமாம்பா…நான் கூட அதுமாதிரி அரசு செய்யணும்னு ஒரு பத்திரிகை தலையங்கத்தில் படித்தேன். “தொட்டில் குழந்தை திட்டம் போல, கட்டில் முதியோர்க்கும் திட்டம்னு” … எனக்கு வாய்த்ததுபோலவே எல்லா பெற்றோருக்கும் பிள்ளைகள் வாய்க்கும்னு சொல்ல முடியாது இல்லையா?… பல்வேறு சூழல் காரணமாக, தங்கள் பெற்றோரை அருகில் இருந்து பார்த்துக்க முடியாத நிலை இருக்கலாம்…அங்களுக்கு எல்லாம் பயன்படற மாதிரி சிறப்பான திட்டம் அரசு வகுத்தா நல்லாதான் இருக்கும்… என்றார் வைரமணி.
அப்பா…ஒவ்வொருவரும் தங்கள் இளமை காலத்தில் செயல் தலைவர் போல…ஓடியாடி வேலை செய்வாங்க… ஆனாலும் முதுமையில, செயல் தலைவர்களுக்கு வழிகாட்டும் செயலூக்கத் தலைவராக, இளைஞர்களுக்கு வழிகாட்டியா இருந்து செயல்படுவாங்க… அது அந்த குடும்பத்துக்கு பேருதவியா இருக்கும்… இது குடும்பத்துக்கு மட்டும் இல்ல…ஒரு தெருவுக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் கூட பொருந்தும்தானேப்பா….என்றான் இனியன்.
“அப்படின்னா இந்த வீட்ல அப்பா செயல் தலைவர்… நீங்க செயலூக்கத் தலைவர் அப்படித்தானே தாத்தா….”என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் வெண்பா.
” நான் இன்னைக்கும் செயல் தலைவராகவும் செயலூக்கத் தலைவராகவும் இரண்டிலேயும்தான் இருக்கேன் வெண்பா…என்றார் வைரமணி சிரித்துக்கொண்டே.
“அதானே…பதவிய மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டீங்களே தாத்தா…” என்றாள் வெண்பா நையாண்டியாய்…
“வெண்பா…அங்கதான் நீ தப்பு பன்ற….இது பதவி இல்லமா… பொறுப்பு… பதவின்னா விட்றலாம்… பொறுப்பை கடைசிவரை வச்சித்தானே இருக்கணும் என்றார்..வைரமணி.
“நீங்க சொல்றதுதாம்பா சரி…நானும் கடைசி வரை இரண்டு பொறுப்பையும் விடமாட்டேம்பா….என்றான் இனியன்
அனைவரின் சிரிப்பலையோடு.