வாழ்வியல்

செயற்கை மழை, பேரழிவை தடுக்கும் புதிய வழிமுறைகள்!

உடுமலை மேல்நிலைப் பள்ளி மாணவர் திருவருள்செல்வன், ட்ரோன் கருவியை மாதிரியாகக் கொண்டு ஆள் இல்லாக் குட்டி விமானங்கள் மூலம், மக்களுக்கும், இயற்கைக்கும் பாதிப்பில்லாத செயற்கை மழையை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சிகளில் மாவட்ட, மாநில அளவில் இவரது படைப்பு முதலிடம் பெற்றுள்ளது.

செயற்கை மழையை உருவாக்கக்கூடிய ஆள் இல்லாக் குட்டி விமானத்தை வடிவமைத்திருப்பது மட்டுமல்லாமல், பேரழிவைத் தடுக்கும் கருவியையும் இவர் கண்டுபிடித்திருக்கிறார். சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாகப் பருவமழை மாற்றமடைகிறது. அதனால் சில இடங்களில் மட்டும் கன மழை பொழிந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது.

தமிழகம் உள்ளிட்ட பகுதியில் ஏற்படும் அதிகமான புயல், வெள்ளப் பாதிப்புக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுதான் காரணம். புதிய கருவியின் மூலம் காற்றின் வேகத்தைத் திசை திருப்பவும், வேகத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ அதன் தன்மையை மாற்றவோ இயலும் என்கிறார்.

அரபு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், விமானம் மூலம் அதிகப் பொருள் செலவில் செயற்கை மழையை உருவாக்கி வருகின்றன. ஆனால், சில்வர் அயோடைட் உள்ளிட்ட அபாயகரமான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தும்போது அது இயற்கைக்கும் மனிதனுக்கும் கேடு விளைவிக்கும்.

ஆனால், என்னுடைய கண்டுபிடிப்போ, வடிநீரில் சோடியம் குளோரைட் எனப்படும் உப்பைக் கலந்து அதன் மூலமாக இயற்கைக்குக் கேடு விளைவிக்காத வேதிப்பொருளை உருவாக்குவதாகும். இந்தியப் பொருளாதாரத்துக்குத் தக்க வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு தொடக்கமாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *