சென்னை, ஏப்.6-
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு வருகிற 8-ந்தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தல் இடையில் நடைபெற உள்ள நிலையில், அதற்கேற்றாற்போல், தேர்வுக்கான அட்டவணை வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், 8-ந்தேதிக்கு பிறகு, 15-ந்தேதியும், அதன் பின்னர் 21-ந்தேதி வரை எந்த தேர்வும் நடத்தப்படாமல், அதற்கடுத்து வரும் நாட்களில் தேர்வுகள் நடத்துவதற்கு ஏற்ற வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
செமஸ்டர் தேர்வைத் தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டு, கல்லூரிகள் திறக்கும் நாளை அறிவிக்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு கல்லூரிகளும் 2023-–24-ம் கல்வியாண்டின் இறுதி வேலை நாட்களை உறுதி செய்ய கல்லூரிக்கல்வி இயக்ககம் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம், அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2023–-24-ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை சார்ந்த கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து, கல்லூரி இறுதி பணி நாளை நிர்ணயித்துக் கொள்ளலாம். 2024-–25-ம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்கு பின், கல்லூரிகள் ஜூன் 19-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.