மீனம்பாக்கம், ஏப்.13-–
சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகளிலும் ஒரே நேரத்தில் விமானங்களை இயக்கி நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கிலோ மீட்டர் தூரமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் தூரமும் கொண்டது. முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரை இறங்கி பின்னர் புறப்பட்டு செல்கின்றன. 2-வது ஓடுபாதையில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதில் முதல் ஓடுபாதை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை அருகே மிகப்பெரிய பசுமை விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதால் 2-வது ஓடுபாதையை நீட்டிக்கும் திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையம் தள்ளி வைத்தது. தற்போது உள்நாடு மற்றும் பன்னாட்டு விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து உள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தற்போது பிரதான முதல் ஓடுபாதையில் ஒரு மணி நேரத்தில் 30-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது 55-க்கும் அதிகமான விமானங்களை ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். விமான சேவைகள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இதற்காக கடந்த சில தினங்களாக சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளிலும் ஒரே நேரத்தில் விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த மாத இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.