சென்னை, ஜூலை16-
சென்னை விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற 138 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வாலிபரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு அதிகாலையில் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் மலேசியா செல்வதற்காக வந்திருந்தார். அவர் 2 அட்டைப்பெட்டிகள் வைத்திருந்தார். அவற்றில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார்.
ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அட்டைப்பெட்டிகளை திறந்து பார்த்தனர். அதற்குள் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வாலிபர் மற்றும் அட்டைப்பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள், வாலிபரின் மலேசிய பயணத்தை ரத்து செய்தனர். 2 அட்டைப்பெட்டிகளிலும் இருந்த 138 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்து, வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், “நட்சத்திர ஆமைகளை ஆந்திர மாநிலம் சதுப்பு நிலம் பகுதியில் இருந்து கொண்டு வருகிறேன். இங்கு அந்த நட்சத்திர ஆமைகளுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.100 வரையில் விலை. ஆனால் மலேசியா நாட்டில் இந்த நட்சத்திர ஆமைகள் ரூ.5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவார்கள்” என்றார். இந்த வகை நட்சத்திர ஆமைகளை மலேசியாவில் பங்களாக்களில் அலங்காரத் தொட்டிகளில் வளர்க்கின்றனர். நட்சத்திர விடுதிகளில் இறைச்சி மற்றும் சூப்புக்காக பயன்படுத்துகின்றனர். இந்த ஆமை ஓடுகளில் வண்ண கலர்களில் அலங்கார பொருட்கள் தயாரிக்கின்றனர். மருத்துவ குணமுடைய நட்சத்திர ஆமைகளை, மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஆனால் நமது நாட்டில் இது அழிந்து வரும் ஒரு உயிரினம் என்பதால் அவற்றை வெளிநாட்டுக்கு கடத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதையும் மீறி கடத்த முயன்றதால் அந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதலான நட்சத்திர ஆமைகளை கிண்டி வனத்துறை அதிகாரிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் ஒப்படைத்தனர்.