செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஆவணங்கள் இல்லாமல் முகத்தை அடையாளம் காணும் ‘டிஜி யாத்ரா’

இயக்குனர் தீபக் தொடங்கிவைத்தார்

சென்னை, ஜூன்.7-

சென்னை விமான நிலையத்தில் ஆவணங்கள் இல்லாமல் முகத்தை அடையாளம் காணும் கருவியை, விமான நிலைய ஆணையக இயக்குனர் தீபக் தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அடையாள அட்டை மற்றும் விமான நிலைய நுழைவுச் சீட்டு (போர்டிங் பாஸ்) ஆகிய காகித ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை. விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அங்குள்ள பயணிகளை அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தை காட்டினால் போதும். இதற்காக பயணிகள் தங்கள் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை இந்த நவீன தொழில் நுட்பம் கொண்ட டிஜி யாத்ரா செயலியில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.

டிஜி யாத்ரா திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

இந்த திட்டத்தை சென்னை உள்பட முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்த மத்திய விமான போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் டிஜி யாத்ரா வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக தனி பாதை மற்றும் முகம் காட்டும் கருவியை சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் தீபக் தொடங்கி வைத்தார்.

இதில் மண்டல இயக்குனர் சுகுனா சிங், மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் டி.ஐ.ஜி. அருண் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டிஜி யாத்ரா திட்டம் தொடங்கப்பட்டாலும் விமான நிலையங்களில் உள்ள வழக்கமான நடைமுறையும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *