சென்னை, அக்.7–
வெயிலின் தாக்கத்தால் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
காவல்துறை, போக்குவரத்து, ரெயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மக்களின் அவதிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. வந்திருந்த பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. பாட்டிலில் கொண்டு வந்த குடிநீரையே பயன்படுத்தினார்கள். ஆனால், அது போதுமானதாக இல்லை. வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.
மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
5 பேர் உயிரிழப்பு
கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். மொத்தம் 63 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் 36 பேர் வீட்டுக்கு சென்றனர். 27 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் (வயது 56). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். நேற்று காலை குடும்பத்தோடு விமான சாகசத்தை காண வந்தார்.
மற்றொருவர் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் (34). இவரும் குடும்பத்தோடு நிகழ்ச்சியை காண வந்து உயிரிழந்தார். அவர்களது உறவினர்கள் கதறி அழுததை பார்க்கும் போது வேதனையாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பெருங்களத்தூரை சேர்ந்த சீனிவாசன் (48) என்பவர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர். அவர் நண்பர்களோடு வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த இடத்தில் 3 பேர் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆந்திராவை சேர்ந்த தினேஷ் என்பவர் மெரினா போலீஸ் நிலையம் அருகே டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போதே வழியில் இறந்து விட்டார்.
இதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் பின்புறம், மணலில் மயங்கிய நிலையில் ஒருவர் கிடந்தார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். விசாரணையில் அவரது பெயர் மணி(55) என்றும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் விமான சாகச நிகழ்ச்சி யை காணவந்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது.
நெரிசல், வெயிலால்
மயங்கி விழுந்தனர்
11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. பொதுமக்கள் பலர் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக மயங்கி விழுந்தனர்.
நிகழ்வு முடிந்து நடந்து சென்ற வர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என ஒரே இடத்தில் சந்தித்து நெரிசலில் நகர்ந்து செல்ல முடியாமல் தடுமாறினர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியாமல் திணறினர். அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர். சிந்தாதிரிப்பேட்டையில் பைக் ஒன்று அதிக வெயில் மற்றும் இன்ஜின் வெப்பத்தால் தீப்பற்றி எரிந்தது. விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
காவல், போக்குவரத்து, ரெயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மக்களின் அவதிக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.