சென்னை, ஜன. 24–
விஐடி சென்னை வளாகத்தில் விஐடி சென்னை மற்றும் அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் இணைந்து நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி விழா மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரை கவுரவிக்கும் விழா நடந்தது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமையுடையது இந்தியா என்ற நிகழ்ச்சிக்கு விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கி பேசியதாவது:–
28 மாநிலம், 8 யூனியன் பிரதேசம், 122 மொழிகள், 6 மதங்கள், 3 ஆயிரம் ஜாதிகள், 6 தேசிய கட்சிகள், 58 மாநில கட்சிகள், 2,763 பதிவு செய்யப்பட்ட கட்சிகளை கொண்ட ஒரே நாடு இந்தியா. 145 கோடி மக்கள் தொகையோடு உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளோம். உலக அளவில் 7-வது பெரிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமையுடையது நமது தாய் நாடு. முதலில் நாம் நமது குடும்பம் மற்றும் நாட்டை நேசிக்க வேண்டும். வீடும் நாடும் ஒன்று தான். இளைஞர்கள் நாடு நமக்கு என்ன செய்ததது என்று கேட்கிறோம். மாறாக நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று எண்ண வேண்டும். எதிர்காலத்தில் ஆசியா தான் உலகை ஆள போகிறது. அதில், இந்தியாவும், சீனாவும் முக்கிய நாடுகள். ஏனென்றால், இந்தியா, சீனாவில் தான் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி 1943-ம் ஆண்டு சிங்கப்பூரில் துவங்கினார். அதில், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளித்தார். நாமும் பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சமீபத்தில் கொல்கத்தா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளும் வருந்தத்தக்கது. திரைப்படங்களில் சமூக விரோதிகளை முன்னிலைப்படுத்தாமல் முகுந்த் வரதராஜன் போன்றோரை முன்னிலைப்படுத்த வேண்டும்.
சிங்கப்பூரில் பள்ளி படிப்பை முடித்த பிறகு, 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி கட்டாயம் அளிக்கப்படுகிறது. அப்போது தான் அவர்களுடைய தியாகம் புரியும். 145 கோடி மக்களை 40 லட்சம் ராணுவ வீரர்கள் ரத்தத்தை சிந்தி பாதுகாத்து வருகின்றனர். அவர்களுடைய தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விழாவை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை ஆர்.வரதராஜன் பேசுகையில், “மேஜர் முகுந்த் வரதராஜன் 2வது படிக்கும் போது ராணுவத்தில் சேர வேண்டும் என்று விருப்பப்பட்டார். வளரும் பருவத்திலும் அதில் ஆர்வமாக இருந்தார். இளம் தலைமுறையினர் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று தீர்மானித்து உழைக்க வேண்டும். முகுந்த் வரதராஜன் எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வார். குழந்தைகளை அன்பாக வழிநடத்தினால் வாழ்வில் உயர்நிலையை அடைவார்கள்“ என்றார்.
இந்திய ராணுவத்தின் தக்ஷின் பாரத் பகுதியில் உள்ள ஊழியர் தலைமையகத்தின் முன்னாள் தலைவர் மு.இந்திராபாலன் வாழ்த்தி பேசினார்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்துக்கு விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், சிறப்பு விருந்தினர்கள் ஆர்.வரதராஜன், மு.இந்திராபாலன், ராணுவ தலைமையகத்தின்(சென்னை) மூத்த ஆட்சேர்ப்பு மருத்துவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ராஜன் குப்தா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் விஐடி இணை துணை வேந்தர் டி.தியாகராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், மாணவர் நலன் இயக்குநர் வி.ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#Amaran #Mukund Varadarajan #Indian Army #Sivakarthikeyan #Nethaji Subhash Chandra Bose