சென்னை, நவ. 5
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ. 50 கோடி செலவில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று திரு.வி.க. நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் தொகுதி, ராயபுரம் தொகுதி, ஆர்.கே. நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் அமைந்துள்ள முழு நேரம் மற்றும் பகுதி நேர கிளை நூலகங்களை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக களஆய்வினை மேற்கொண்டார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:–
இந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் சென்னை பெருநகரத்திற்குட்பட்ட 10 இடங்களிலுள்ள நூலகங்களை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ. 20 கோடி செலவில், பகிர்ந்த பணியிட மையம் அமைப்பதற்கு ரூபாய் 30 கோடி செலவிற்கும் ஆக மொத்தம் 50 கோடி ரூபாயில் சுமார் 10 நூலகங்களுக்கு உண்டான அந்த இடங்களில் படிக்கின்ற அந்த நூலகத்தினுடைய தரத்தையும், பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் ஏற்படுத்தி தருகின்ற வகையில் திட்டமிடப்பட்டு, அந்தப் பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நேற்றைய தினம் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு வடசென்னையில் குறிப்பாக திரு.வி.க. நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் தொகுதி, ராயபுரம் தொகுதி, ஆர்.கே. நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார். அந்த வகையில் இன்றைக்கு சுமார் பல்வேறு இடங்களில் நூலகங்களை ஆய்வு செய்து, அந்த நூலகங்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும், 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவதற்கு சற்று வசதி குறைவாக உள்ள நூலகங்களை இடித்துவிட்டு, புதிதாக நூலகங்களை கட்டுவதற்கு திட்டமிட்டு ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றோம்.
பிப்ரவரிக்குள்
முடிக்க வேண்டும்…
இதுபோன்று தொடர்ந்து இன்றைக்கு பல்வேறு நூலகங்களை ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றோம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகின்ற நூலகங்கள் என்று ஒரு திட்டமிடலையும் புதிதாக கட்டடங்களைக் கட்டி மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு என்று இரண்டு வகைகளாக பிரித்து ஏற்கனவே இருக்கின்ற நூலகங்களை மேம்படுத்துவதற்கான பணியை பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று புதிதாக கட்டுமானம் கட்டி திறக்க வேண்டிய இந்த பணிகளை திட்டமிட்டு ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் டிசம்பர் மாதம் 2025 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
மேயர் பிரியா
இந்த ஆய்வுகளின்போது மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ஜே.ஜே.எபிநேசர், ஆர்.டி.சேகர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மண்டல குழுத் தலைவர்கள் ஸ்ரீராமலு, நேதாஜி கணேசன், சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி,
மண்டல அலுவலர் பரிதா பானு, கண்காணிப்புப் பொறியாளர்கள் ராஜமகேஷ்குமார், பாலமுருகன், மாவட்ட நூலக அலுவலர் கவிதா, செயற்பொறியாளர் ராஜன்பாபு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வி.சுதாகர், சொ.வேலு, ஜேசுபாதம் பாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், கீதா சுரேஷ், தேவி கதிரேசன், ஜீவன், டில்லிபாபு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.