அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கிவைத்தார்
சென்னை, ஜன.17-–
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3-வது சர்வதேச புத்தக திருவிழாவை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 3-வது சர்வதேச புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இந்த சர்வதேச புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-–
சென்னை சர்வதேச புத்தக திருவிழா நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது. இலக்கியம், மொழி மற்றும் பண்பாட்டின் கொண்டாட்டமாக நடைபெறும் இந்த விழாவில், உலகெங்கிலும் இருந்து இலக்கியம் மற்றும் படைப்புல ஆளுமைகள் கலந்துகொள்கின்றனர்.
சென்னையில் நடைபெற்ற முதலாம் ஆண்டு சர்வதேச புத்தக திருவிழாவில், 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2-ம் ஆண்டு சர்வதேச புத்தக திருவிழாவில், 40 நாடுகள் பங்கேற்று, 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நடப்பாண்டில், 64 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மொழி பெயர்க்கப்பட்ட 30 நூல்களை வெளியிட உள்ளார்.
2,500 ஆண்டுகளுக்கு மேலான இலக்கிய பாரம்பரியம் கொண்ட தொன்மையான வரலாறு, நம் தமிழகத்திற்கு உண்டு. இலக்கியம், இசை, கலைகளின் இதயமாகிய நம் சென்னை எழுத்து மற்றும் படைப்புகளில் புதுமைகள் நிறைந்த மாநகரமாக உள்ளது.
இந்த நிகழ்வின் முக்கிய மைல்கல்லாக, தமிழ்நாடு மொழி பெயர்வு மானியக்குழு 166 நூல்கள், 32 மொழிகளில் மொழி பெயர்த்திட ரூ.3 கோடி நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ் மொழியை உலகளவில் கொண்டு செல்லும் வகையில், அதிக அளவிலான புத்தகங்களை மொழி பெயர்த்து, தமிழ் மொழி இலக்கிய வார்ப்புகளை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு பாடநூல்கள் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் மேலாண்மை இயக்குனர் சங்கர், இணைஇயக்குனர் சங்கர சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.