சென்னை, ஜன 4–
சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் இளம் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது.
எஸ்கான்–25 மாநாட்டில் தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைமாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (5ந் தேதி) காலை 9 மணிக்கு பங்கேற்கிறார். இம்மாநாட்டில் ஜி.ஆர். ஆனந்தபத்மநாபன் (ஜிஆர்டி நகை மாளிகை நிர்வாக இயக்குனர்), டாக்டர் என். ஜெகதீசன் (தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்), சி. சிவசங்கரன் (ஏர்செல் நிறுவனர்), பாரதி பாஸ்கர் (புகழ்பெற்ற பேச்சாளர்), வி.பார்த்திபன் வரதராஜன் (புல் மெஷின்ஸ் இயக்குனர்), எஸ். முத்துராமன் (லட்சுமி செராமிக்ஸ் இயக்குனர்), கணபதி சங்கரபாஹம் (வஜ்ரா குளோபல் கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனர்), கலந்து கொள்கின்றனர் என்று எஸ் தலைவர் வி.நீதிமோகன் தெரிவித்தார். எஸ் வடக்கு மண்டலம் துணைத் தலைவர் ஏ.ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அ.நடேசன், இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இளம் தொழில் முனைவோர் (எஸ்) தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் சவால்கள் மற்றும் ஆபத்துக்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள மற்றும் தொழில்ரீதியான பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு, இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக மாற்றும் நோக்கத்துடன், தொழில் முனைவோர் தங்கள் தொழில்களை வளர்த்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற உயரிய நோக்கத்துடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இளம் தொழில்முனைவோர் மையம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுணனால் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பங்கேற்று வாழ்த்தினார்.
இந்த ஆண்டு 13வது முறையாக இம்மாநாடு ‘நோக்கத்தை நாடி’ என்ற தலைப்பில் சென்னை மாநகரில் உள்ள சென்னை வர்த்தக வளாகத்தில் இன்றும் நாளையும் (5ந் தேதி) மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் 2500க்கும் அதிகமான ‘எஸ்’ மைய உறுப்பினர்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் பெங்களூரு முழுவதிலிருந்தும் பங்கேற்க உள்ளனர். மேலும் இம்மாநாட்டில் ‘எஸ்மார்ட்’ வர்த்தக கண்காட்சியில் 270 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘எஸ்மார்ட்’ வர்த்தக கண்காட்சியில் எஸ் மைய உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு பயனடையலாம்.