செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

சென்னை, அக். 12–

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மாடியிலிருந்து குறித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், இரவு, பகல் என எப்போதும் இந்த ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படும். நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆஸ்பத்திரியின் டவர்-1 மற்றும் டவர் -2 ஆகிய கட்டிடங்களை இணைக்கும் சிறிய பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் திடீரென கீழே குதித்தார். அப்போது, அவ்வழியாக சென்றவர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாடியில் இருந்து கீழே குதித்த வாலிபர், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வையாவூர் கிராமத்தை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 32) என்பதும், கடந்த 3 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கவுரி சங்கர், கடந்த 9-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்தது.அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்ததால் 3 ஆண்டுகளாக கவுரி சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் மீண்டும் டயாலிசிஸ் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை. வலியை தாங்க முடியாமல் அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு பின்னர் கவுரி சங்கரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *