நாட்டின் 5 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
சென்னை, நவ. 7–
தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னை – மைசூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது.
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் நவம்பர் 11ஆம் தேதி முதல் சென்னை – மைசூர் இடையே சேவையை தொடங்க உள்ளது. இந்நிலையில் இன்று காலை அதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு ரயில் சேவைகள் இருந்தாலும் வந்தேபாரத் ரயில் மிக விரைவாக பயண தூரத்தை கடக்கும்.
வாரத்தில் 6 நாட்கள்
வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாள்களில் சென்னை – மைசூர் வந்தேபாரத் ரயில் சேவை இருக்கும். காலை 5.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிளம்பும் ரயில், மதியம் 12.30 மணிக்கு மைசூரை சென்றடையும். 504 கிலோ மீட்டர் தூரத்தை மணிக்கு 76 கிமீ வேகத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூர் தவிர வேறு எந்த ஊரிலும் நிற்காது. மதியம் 1.30 மணிக்கு மைசூரில் மீண்டும் கிளம்பும் ரயில், இரவு 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது. மொத்த தூரமான 504 கி.மீ தொலைவை 6 மணி நேரம் 30 நிமிடத்தில் கடக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது.
நவம்பர் 11ஆம் தேதி முதல் இதன் சேவை தொடங்க உள்ள நிலையில், இன்று சோதனை ஓட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை கிளம்பி மைசூரை நோக்கி சென்றுள்ள ரயில் இரவு சென்னை திரும்பும். தென் இந்தியாவிலிருந்து செல்லும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் 5 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.