செய்திகள்

சென்னை – மைசூர் உட்பட 10 புதிய வந்தே பாரத் ரெயில் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Makkal Kural Official

ஆமதாபாத், மார்ச் 12–

சென்னை – மைசூர், மங்களூரு – திருவனந்தபுரம் உட்பட மொத்தம் 10 புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இன்று காலை காணொளி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ரெயில்வே உள்கட்டமைப்பு, தொடர்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையை ஊக்கப்படுத்தும் வகையில், அகமதாபாத்தில் உள்ள டிஎப்சியின் கட்டுப்பாட்டு மையத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார்.

ரெயில்வே பணிமனைகள், லோகோ ஷெட்கள், பிட் லைன் மற்றும் கோச்சிங் டிப்போக்கள், புதிய பாதை, எலக்ட்ரிக் தொடர்பு சிஸ்டத்தை புதுப்பிக்கும் பணிகள் போன்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

10 வந்தே பாரத் ரெயில்

பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் மட்டுமே, வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை – மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரெயில், லக்னோ–டேராடூன், கலபுர்கி – பெங்களூரு, ராஞ்சி – வாரணாசி, டெல்லி (நிஜாமுதீன்) – கஜுரஹோ, செகந்திராபாத் – விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி – பாட்னா, லக்னோ – பாட்னா, அகமதாபாத் – மும்பை, புரி – விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.

மேலும், திருவனந்தபுரம் – காசர்கோடு வந்தே பாரத் ரெயில் சேவையை மங்களூர் வரை நீட்டிக்கும் நிகழ்வையும் அவர் தொடக்கி வைத்தார்.

கொல்லம் – திருப்பதி விரைவு ரெயில் சேவையைத் தொடக்கி வைத்த அவர், பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட் லைனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூர் ஆகிய 6 ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்கள் உட்பட 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை மருந்தகங்களையும் பிரதமர் திறந்து வைத்தார். இந்த மருந்தகங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குகின்றன.

168 ரெயில் நிலையங்களில்

உள்ளூர் பொருட்கள் விற்பனை

உள்ளூர் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலான 1,500 ’ஒரு ரெயில் நிலையம், ஒரு பொருள்’ என்ற விற்பனை அரங்குகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் தமிழ்நாட்டில் 168 ரெயில் நிலையங்கள் அடங்கும்.

நாட்டின் 975 பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தியில் இயங்கும் நிலையங்கள், கட்டிடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த முன்மாதிரியான முயற்சி இந்தியாவின் மாற்று எரிசக்தி பயன்பாட்டு முயற்சிக்கு பங்களிப்பதுடன், ரெயில்வேயின் கார்பன் பயன்பாட்டை குறைக்கும்.

குஜராதின் தஹ்ஜ்-ல் ரூ.20,600 கோடி மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் காம்பளக்சுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான எக்டா மால்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

சென்னை சென்ட்ரல்

ரெயில் நிலையத்தில்…

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை–மைசூரு இடையேயான 2வது வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூரிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் (எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்:20664), சென்ட்ரல், காட்பாடி, ஜோலார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20க்கு மைசூரு சென்றடையும்.

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரெயில் ஏப்ரல் 4ம் தேதி வரை பெங்களூரு வரை இயக்கப்படும் என்றும், 5–ந்தேதி முதல் மைசூரு வரை இயக்கப்படும்.

இந்த ரெயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *