செய்திகள்

சென்னை – மைசூருக்கு வாரத்தில் 6 நாட்கள் செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

சென்னை, நவ 11-

சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு வாரத்தில் 6 நாட்கள் செல்லும் வந்தே பாரத் ரயிலை, பெங்களூரில் பிரதமர் மோடி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக ரயில்வே துறை உள்ளது. நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பான பயணம், விரைவு, சொகுசு என பல்வேறு வசதிகள் இருப்பதால் ஏழை மக்கள் மட்டும் இன்றி வசதி படைத்தவர்களுக்கும் விருப்பமான பயணமாக ரயில் பயணம் தான் அமைகிறது.

தொடங்கி வைத்தார் மோடி

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ரயில்வே அளித்து வருகிறது. அந்த வகையில், முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 5-வதாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

கடந்த 7 ந்தேதி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப் பட்டதையடுத்து, ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று பெங்களூரு வந்த பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து நேரடியாக சென்னை செல்கிறது.

சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் இந்த ரயில், காட்பாடி வழியாக பெங்களூர் சென்று மைசூருவை அடையும். இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரில் மட்டுமே நிற்கும். புதன்கிழமையை தவிர்த்து வாரத்தில் மீதமுள்ள 6 நாட்களும் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. முதல் நாளை யொட்டி, இந்த ரெயில் பெங்களூரு – சென்னை இடையே 43 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

ஏராளமான வசதிகள்

இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். ஆட்டோமெட்டிக் கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான ஆடியோ விஷுவல் தகவல் மையம், ஹாட்ஸ்பாட் வைஃபை, சொகுசு இருக்கைகள் என பல்வேறு நவீன சொகுசு வசதிகளை இந்த ரயில் கொண்டதாகும். ஒவ்வொரு கோச்சிற்கும் தனித்தனியான பண்ட்ரி வசதியும் உள்ளது.

நாளை முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து காலை 5.50 மணி புறப்படும் இந்த ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடையும். நண்பகல் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. காட்பாடி ரயில் நிலையத்திலும் இந்த ரயில் நின்று செல்லும். மைசூருவில் இருந்து 1.05 மணிக்கு புறப்படும் ரயில் சென்னைக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேரும்.இந்த வந்தே பாரத் ரயில் 504 கி. மீட்டர் தொலைவை 6.5 மணி நேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *