மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
புதுடெல்லி, அக்.6-–
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்காக 65 சதவீத நிதியை மத்திய அரசே ஏற்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் மாதவரம் முதல் சிறுச்சேரி, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரை என மொத்தம் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடு ரூ.63 ஆயிரத்து 246 கோடி ஆகும்.
இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயிலுக்கான திட்டப்பணிகள் முழுக்க முழுக்க மாநில அரசு திட்டமாக கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனால் மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை.
எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை 2-வது மெட்ரோ ரெயில் திட்டபணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கடந்த மாதம் 27-ந் தேதி சந்தித்து கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் எவ்வளவு தொகையை மத்திய அரசு வழங்கும் என்பது குறித்த தகவல் அப்போது அறிவிக்கப்படவில்லை.
ஆனால் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.7 ஆயிரத்து 425 கோடியும், தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.22 ஆயிரத்து 228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தில் கடனாக ரூ.33 ஆயிரத்து 593 கோடியும் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு செய்யப்படும் நிதி உதவித்தொகை குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 90 சதவீதம் அளவுக்கு தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில் மாநிலத்துறை திட்டமாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் தந்தது. அதனால் இந்த திட்டம் மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்படும்.
கடந்த 2017-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் கொள்கையின்படி நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது.
65% மத்திய அரசு வழங்கும்
மேலும் இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு ரூ.32 ஆயிரத்து 548 கோடி கடனாக நிதி பெறுவதற்கு மத்திய அரசு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6 ஆயிரத்து 100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது மூலம் மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்கும்.
அதன்படி அதில் இந்த நிதி உதவியில் ரூ.33 ஆயிரத்து 593 கோடி முழு கடன் மற்றும் சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7 ஆயிரத்து 425 கோடியும் அடங்கும். மீதமுள்ள 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதி உதவி செய்யும்.
எனவே, பன்னாட்டு நிறுவனங் களிடம் இருந்து பெறப்படும் கடன்கள், மத்திய அரசின் கடனாக கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கப்படும். மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசின் செயல்பாடாக இருந்தது.
ஆனால் இப்போது மத்திய அரசின் ஒப்புதலால் இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33 ஆயிரத்து 593 கோடி அளவுக்கு நிதி அளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை நிதி அமைச்சகம் அணுகும்.
இதேபோல, இந்த கடன்கள் மாநில அரசுக்கானது அல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை மாநில அரசுக்கும், மாநில அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கும் செல்லும். தற்போதைய வழிமுறைக்கு மாறாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசுக்கும், மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து நேரடியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு செல்லும் வழிமுறையாக மாற்றி அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ
கடனை திருப்பிச் செலுத்தும்
சென்னை மெட்ரோ ரெயில் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மாநில அரசு இருந்த இடத்தில், இனி சென்னை மெட்ரோ ரெயில் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்படும். கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்ளில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும்.
கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தைச் சார்ந்தது. திருப்பிச் செலுத்துதல், பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டு காலத்திற்குப்பின், அதாவது ஏறத்தாழ திட்டம் முடிந்தபின் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் இல்லாத பட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.