சென்னை, ஆக. 9–-
இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரத்து 125 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ‘பூஜ்ஜியம்’ நிதி ஒதுக்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2009-ம் ஆண்டு அப்போது துணை முதல மைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் திருவொற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை முழு வீச்சில் நடந்து வருகிறது.
அதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான தூரத்திற்கு பணிகள் நடந்து வருகிறது. அதற்கான திட்ட மதிப்பீடு மட்டும் ரூ.63 ஆயிரத்து 246 கோடி ஆகும்.
இந்த திட்டப்பணிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2021-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த திட்டத்திற்கு மத்திய அரசு தனது பங்களிப்பு தொகையை வழங்கவில்லை. இருப்பினும் திட்டப்பணிகள் நின்று விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அதற்கான நிதியை செலவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோவின் 2-ம் மற்றும் 3-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதி மந்திரிக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி புறக்கணித்தார்.
பிற மாநிலங்களுக்கு தாராள நிதி
இந்த நிலையில் தமிழக மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு பிற மாநிலங்களில் நடக்கும் மெட்ரோ திட்டங்களுக்கு மட்டும் தாராளமாக நிதி வழங்கி உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக மெட்ரோ திட்டங்களுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை என்பதனை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு உள்ளது.
தி.மு.க.வின் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் சென்னை மெட்ரோ திட்டம் குறித்தும், பிற மாநிலங்களில் செயல்படும் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி விவரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் ஊரகத்துறை இணை மந்திரி தோக்கன் சாகு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் மற்றும் டெல்லியில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. அதற்காக கடந்த 2 ஆண்டுகளில் இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரத்து 125 கோடி நிதி வழங்கியுள்ளது. அதில் கர்நாடகாவிற்கு ரூ.7,658 கோடி, மராட்டியத்திற்கு ரூ.6,958 கோடி, குஜராத்துக்கு ரூ.6,557 கோடி, டெல்லிக்கு ரூ.5,925 கோடி, உத்தரபிரதேசத்திற்கு ரூ.4,542 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.2,196 கோடி, பீகாருக்கு ரூ.1,138 கோடி, கேரளாவிற்கு ரூ.146 கோடி ஒதுக்கியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் நடைபெறும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒரு பைசா வழங்கவில்லை. ‘பூஜ்ஜியம்’ நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில் சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகள் குறித்த கேள்விக்கு மத்திய அரசு, தமிழக அரசு சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தை 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63 கோடியே 246 கோடி செலவில் நிறைவேற்ற அறிக்கை கொடுத்துள்ளது. இதுபோன்ற அதிகபட்ச நிதி ஒதுக்கிடு திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதற்கு திட்டத்திற்கான சாத்தியக்கூறு மற்றும் தேவையான வளங்கள் இருக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் அதற்கான செலவினத்தை தமிழக அரசே சுமந்து உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த பதிலால், அதிர்ச்சி அடைந்த தமிழக எம்.பி.க்கள் மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தவறில்லை. ஆனால் மத்திய அரசுக்கு அதிக வருவாய் தருவதில் 2-ம் இடத்தில் இருக்கும் தமிழகத்துக்கு மட்டும் நிதி ஒதுக்குவதில் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசு 3-ம் கட்ட திட்டத்திற்கும் இன்னும் முழுமையான ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை 3-ம் கட்ட திட்டம் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையும், கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரையும், மீனம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையும் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.