சென்னை, பிப். 1–
சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதம் 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 10–ந் தேதி 3,60,997 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 23,78,989 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 7,219 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பயணிகளும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.