சென்னை, மே 3–
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த 2020-ம் ஆண்டு சைக்கிள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதன்மூலம் பயணிகள் சிறப்பு வகுப்பு பெட்டியில் சைக்கிள்களை கொண்டு சென்றனர். ரெயில்களில் சைக்கிள் கொண்டு செல்லும் பயணிகள் மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கியதும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சைக்கிளிலேயே சென்றனர்.
இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கொரோனா தொற்றுக்கு பிறகு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் மெட்ரோ ரெயில்களில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில்களில் தற்போது பயணிகள் அதிகமாக வருவதால் சைக்கிள் கொண்டு செல்ல இடம் இல்லை. இதற்கு முன்பு சிறப்பு வகுப்புகளில் குறைவான பயணிகளே பயணம் செய்ததால் அதில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது அந்த பெட்டி மகளிர் பெட்டியாக மாற்றப்பட்டுவிட்டது. எனவே சைக்கிள்கள் கொண்டு செல்ல இடவசதி இல்லை.
இதேபோல் மெட்ரோ ரெயில்களில் செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமைக்கப்படாத இறைச்சி, மீன்களை எடுத்து செல்லவும் அனுமதி கிடையாது. எனவே பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில்களுக்கு செல்லப் பிராணிகளை எடுத்து வர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.