செய்திகள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ. 411½ கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, ஆக.23–-

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் வரவு -செலவுக்கான வித்தியாசத் தொகை மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ,411½ கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்து உள்ளார்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 6 பணிமனைகளில் கட்டிடப் பணிகள் மற்றும் மின்சாரப் பஸ்களுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் பஸ்களை மாற்றுவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ,111.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்து உள்ளார்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தை உலகத் தரம் வாய்ந்த பொதுப்போக்குவரத்து அமைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் (சி.சி.பி.) செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு இடையே 20.10.2023 அன்று பொதுப் போக்குவரத்து சேவை ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம், பஸ் இயக்கத்தில் முக்கிய செயல்திறன் குறியீடுகளை உறுதி செய்து, அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத்தொகையை வழங்கும். முதற்கட்டமாக, 500 மின்சார பஸ்களுடன், மாநகர் போக்குவரத்துக் கழகப்பஸ்கள் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் பெரம்பூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பூந்தமல்லி, கே.கே. நகர் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 6 பணிமனைகள் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, 500 மின்சார பஸ்கள் சிறந்த முறையில் இயக்கப்படும். மேலும், மின்சார பஸ்களை இயக்குவதால் எரிபொருள் செலவு குறைவதுடன், காற்று மாசுபாடு குறையும். இப்புதிய மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ள 6 பணிமனைகளில் கட்டிட பணிகள் மற்றும் மின்சார பஸ்களுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் மற்றும் டீசல் பஸ்களை மாற்றப்பட உள்ள 5 பணிமனைகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் ரூ,111.50 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், பொதுப்போக்குவரத்து சேவை ஒப்பந்தத்தின்படி முதலாவது ஆண்டு 2023–-2024-ல் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பஸ்களில் 10 சதவீத பஸ்களுக்கு வரவிற்கும் – செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ,21.50 கோடி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 2-வது ஆண்டு (2024–-2025) பொதுப்போக்குவரத்து சேவைகள் ஒப்பந்தத்தின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பஸ்களில் 50 சதவீத பஸ்களுக்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ,300 கோடி மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதன்மூலம், போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்பட்டு, நாள்தோறும் சுமார் 35 லட்சம் பயணிகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சேவையினை சிறப்பான முறையில் பயன்படுத்திட உறுதுணையாக இருக்கும்.

இத்தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *