ஜூன் 2 வது வாரத்தில் நடைமுறைக்கு வர வாய்ப்பு
சென்னை, மே 14–
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் 2வது வாரத்தில் நடைமுறைக்கு வருகிறது.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக, பொதுப் போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யும் திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஆனால் இவை மூன்றிற்கும் மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள்.
அரசு பேருந்துகளில் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளும் முறைதான் உள்ளது. ரயில்களில் யூடிஎஸ் செயலி முறையிலும், நேரடியாகவும் டிக்கெட் பெறலாம். மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய, பயண அட்டை, செயலி மற்றும் நேரடியாக டிக்கெட் பெறும் வசதி உள்ளது. இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்து நிலையில், ஜூன் 2வது வாரத்தில் இந்த திட்டம் செயல்படுத்தபடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிற்க வேண்டிய அவசியமில்லை
இதற்காக ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்துகொள்ள முடியும். பேருந்துகளிலும் நடத்துநர்களிடம் ஸ்கேன் செய்துகொள்ளலாம். இந்த ஒரு கார்டை ரீ-சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால் அவர்கள் கவுன்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
இதற்காக தனியாக செயலியை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது. இதன் மூலம், கியூஆர் கோடு பயன்படுத்தி அனைத்து பொதுப் போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக வடிவமைக்கப்பட்ட செயலியில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.