செய்திகள்

‘‘சென்னை மாநகருக்கு தினசரி 700 மில்லியன் லிட்டர் குடிநீரை தினசரி தொடர்ந்து வழங்க வேண்டும்:’’ அலுவலர்களுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்

‘‘சென்னை மாநகருக்கு தினசரி 700 மில்லியன் லிட்டர் குடிநீரை தினசரி தொடர்ந்து வழங்க வேண்டும்:’’

அலுவலர்களுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவு

கொரோனா தடுப்பு பணியில் 38,200 பணியாளர்கள்

சென்னை, செப். 13

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இம்மாதம் 11ந் தேதி அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முதலமைச்சர் அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி எவ்வித தொய்வும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ளவும், பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால்கள், ஏரி, குளம், வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி மழைநீர் வீணாகாமல் சேகரிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பை கேட்டறிந்த அமைச்சர், பொது மக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் தினசரி 700 மில்லியன் லிட்டர் குடிநீரை தொடர்ந்து வழங்கிட உத்தரவிட்டார்.

மேலும், கூட்டத்தில் அமைச்சர் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் போன்ற திட்டப்பணிகள் குறித்தும், சீர்மிகு நகர திட்டம் மற்றும் அம்ரூத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ரூ. 1 கோடியே 89 லட்சம் அபராதம் வசூல்

தற்பொழுது, அரசின் சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இதுவரை 1 கோடியே 89 லட்சத்து 25 ஆயிரத்து 662 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் நோக்கம் பொதுமக்களிடமிருந்து அபராதம் வசூலிப்பது அல்ல. எனவே, பொதுமக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் இம்மாதம் 11ந் தேதி வரை 1 லட்சத்து 46 ஆயரத்து 593 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 772 பேர் குணமடைந்துள்ளனர். தற்சமயம் 10 ஆயிரத்து 879 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன. இது நாள் வரை 11.87 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38 ஆயிரத்து 198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

600 காய்ச்சல் சிறப்பு முகாம்

முதலமைச்சரின் உத்தரவின்படி, கோவிட் நோய் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 600 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 45.730 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 24 லட்சத்து 11 ஆயிரத்து 329 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 651பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிச்சாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் (பொ) ஜெ.யு.சந்திரகலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *