செய்திகள்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிதொடங்கி வைத்தார்

Makkal Kural Official

சென்னை , செப் 12–

சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ஆர். பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

2024–25ம் கல்வியாண்டில் மேயரின் 14வது அறிவிப்பான சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே, டேக்வோண்டோ பயிற்சியானது, திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குக்ஸ் சாலை–சென்னை உயர்நிலைப்பள்ளி, ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டன் தெரு– சென்னை உயர்நிலைப்பள்ளி, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தா தெரு–சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை–சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் – சென்னை மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காலடிப்பேட்டை – சென்னை உயர்நிலைப்பள்ளி என 6 சென்னை பள்ளிகளில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

50 மாணவிகள் தேர்வு

ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளை தேர்ந்தெடுத்து, வாரத்தில் 2 நாட்களில் 75 நிமிடங்கள், தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக அதற்குத் தேவையான உபகரணங்களுடன் சரியான முறையில் பயிற்சிகள் கொடுக்கப்படும். 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்தப் பயிற்சியின் முடிவில் பயிற்சி எடுத்துக் கொண்ட மாணவிகள் இடையே போட்டிகள் நடத்தப்படவும், மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் இவர்களை பங்கெடுக்கச் செய்து வெற்றி பெறச் செய்வதும், இந்த அறிவிப்பின் இலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மாணவிகள் உடல் வலிமையுடனும், மனத்திடத்துடனும், அறிவு வளத்துடனும், சமுதாய நோக்குடனும், சிறந்து விளங்கிடும் வகையில் மேயரின் இந்த அறிவிப்பானது திறம்பட தொடங்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏ தாயகம்கவி

இந்நிகழ்ச்சியில் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி, துணை மேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையாளர் (கல்வி) விஜயாராணி, திரு.வி.க.நகர் மண்டலக்குழுத் தலைவர் சரிதாமகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ச. அம்பேத்வளவன், மு.சரவணன், கல்வி அலுவலர் வசந்தி, பி.டி.எப். ஸ்கூல்ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர்கள் ரென்சி அய்யப்பன் மணி, சங்கீதா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *