சென்னை, ஜூன் 21–
கராத்தே பயிற்சி மேற்கொள்ளும் சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளி மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா வழங்கினார்.
ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளை தேர்ந்தெடுத்து, வாரத்தில் 2 நாட்களில் 75 நிமிடங்கள், தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக அதற்குத் தேவையான உபகரணங்களுடன் சரியான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 29 சென்னை பள்ளிகளில் 1500 மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சியானது, 10 பயிற்றுநர்களைக் கொண்டு 4 மாதங்கள் வழங்கப்பட்டது.
உலக தற்காப்புக் கலை வரலாற்றில் முதல்முறையாக, முதல் சாதனையாக நான்கு மாத பயிற்சியில் 3 உலக சாதனைகளை 25.2.2025 அன்று நிகழ்த்தி, “சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் உலக சாதனைகளாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உலக சாதனைகளை உலக அரங்கில் முதலில் முயற்சி செய்தது நமது சென்னை பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் புதிதாக 20 சென்னை பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பள்ளிக்கு தலா 50 மாணவிகள் என 1000 மாணவிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் என வாரத்திற்கு மூன்று நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் என 4 மாதங்களுக்கு கராத்தே பயிற்சி சிறப்பாக வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியினை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு மேயர் கராத்தே சீருடைகளை வழங்குவதன் அடையாளமாக புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு கராத்தே சீருடைகளை வழங்கி ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணைமேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையாளர் ஜெ.விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த.விசுவநாதன், கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர் ஜல் தெரு சென்னை உயர்நிலைப்பள்ளி, சிந்தாதரிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி, பாடிக்குப்பம், சென்னை உயர்நிலைப்பள்ளி, புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெரு, சென்னை உயர்நிலைப்பள்ளி, அப்பாசாமி தெரு, சென்னை மேல்நிலைப்பள்ளி, அயனாவரம் உள்பட 20 பள்ளிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.
![]()





