செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 11–ம் வகுப்பு தேர்வில் 95.30% தேர்ச்சி

சென்னை, ஆக.1–

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர்கள் 95.30 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 2019–-20–ம் கல்வியாண்டில் நடைபெற்ற அரசு 11–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1,911 மாணவர்கள், 2,984 மாணவியர்கள் என மொத்தம் 4,895 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 1,777 மாணவர்கள், 2,888 மாணவியர்கள் என மொத்தம் 4,665 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.30 ஆகும். சென்ற ஆண்டை விட 1.78 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4 பள்ளிகள் 100% தேர்ச்சி

500 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவ, மாணவியர்களும், 450–க்கு அதிகமாக 108 மாணவ, மாணவியர்களும், 400–க்கு மேல் 306 மாணவ, மாணவியர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி, லாயட்ஸ் ரோடு சென்னை மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.ஐ.டி.நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளன.

மேலும், 11–-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார். இத்தகவலை இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *