செய்திகள்

சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்: கமிஷனர் பிரகாஷ் துவக்கி வைத்தார்

Spread the love

சென்னை, ஜூலை 20–

பெருநகர சென்னை மாநகராட்சியின், பொது சுகாதாரத் துறையின் சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமினை பெருங்குடி மண்டலத்தில் அமைந்துள்ள 100 படுக்கைகள் வசதி கொண்ட நகர்புற சமூதாய நல மையத்தில் கமிஷனர் கோ.பிரகாஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இப்பரிசோதனை முகாமில் சென்னை மாநகராட்சி பணியாளர்களில் 304 ஆண்கள் மற்றும் 256 பெண்கள் என மொத்தம் 560 பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தோல் நோய், காச நோய், இ.சி.ஜி. மற்றும் பொது மருத்துவம் போன்ற அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமினை துவக்கி வைத்த கமிஷனர் பேசியதாவது:–

சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு, பணியாளர்களின் சுகாதாரம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி பணியாளர்களின் சுகாதாரம், மருத்துவ பரிசோதனை மற்றும் இதர பொது தகவல்கள் சேகரிக்கப்பட்டு, முன்பு சேகரிக்கப்பட்டுள்ள மருத்துவ தகவல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு ‘தகவல் வங்கி’ உருவாக்கப்படும்.

இந்த தகவல்கள், எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் இது போன்ற முகாம்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க பயன்படுத்தப்படும். மாநகராட்சி பணியாளர்களின் சமூக நல்வாழ்வு, அவர்களது குழந்தைகளின் திறன் மேம்பாடு, கல்வி உதவித்தொகை மற்றும் வேலை வாய்ப்புகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, எதிர்வரும் காலங்களில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) பி. மதுசுதன் ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (நிகர்நிலை பல்கலைக்கழகம்) மருத்தவர்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *