சென்னை, ஆக. 20–
சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. இதனிடையே நள்ளிரவில் துய்மை பணியாளர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:
பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்பதால் தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கத் தடை இல்லை. சென்னை மாநகராட்சி, அரசு கலந்து பேசி பணியாளர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தைத் தர வேண்டும். தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடை விதிக்க முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
![]()





