செய்திகள்

சென்னை மக்களை குளிர்வித்த கோடை மழை

சென்னை, மே 16–

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே கோடை மழை பெய்து, வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை குளிர்வித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலுக்கிடையில், மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையில், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நேற்றிரவும் கூட கோயம்பேடு, பல்லாவரம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், தரமணி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, அடையாறு போன்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. சில பகுதிகளில் மழை நின்றிருந்தாலும் கூட வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

கோடை வெப்பத்தால் வாடிவந்த சென்னை மக்களை திடீரென சூழ்ந்த கருமேகங்களும், மழையும் குளிர்வித்து நிம்மதி பெறச் செய்துள்ளது.

முன்னதாக நேற்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *