ராணிப்பேட்டை, அக். 28
சென்னை – பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ. யு. சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சென்னை- – பெங்களூர் வரையில் சுமார் 262.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இச்சாலையில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்துடன் பயணிக்க முடியும். இச்சாலை பணியானது கர்நாடகா, ஆந்திரா சித்தூர் வழியாக தமிழ்நாடு வேலூர், இராணிப்பேட்டை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வரை சென்று சாலை இணைக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் எல்லையிலிருந்து மகேந்திரவாடி ஏரி முதல் தக்கோலம் வரையில் 25.5 கி.மீ. வரை மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகளில் சுமார் 15.5 கிலோமீட்டர் வரையில் பணிகள் முடிவுற்றுள்ளது. எஞ்சிய பணிகள் சிறிது காலம் நிறுத்தப்பட்டு மீண்டும் தீபாவளி பண்டிகை முடித்து தொடங்கப்பட உள்ளது. இப்பணிகளையும் இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின் போது பானாவரம் அருகே ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்வதற்கு பாதை இல்லாமல் அடைக்கப்பட்டு இருப்பதை தேசிய நெடுஞ்சாலை விரைவுச்சாலை அலுவலருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்கள். இதற்கு முன்னதாக தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையில் நெமிலி வட்டம் அவலூர்பேட்டையில் விபத்து நடைபெறும் இடங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையில் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் ஆற்காடு எஸ்எஸ்எஸ் கல்லூரி, மேல்விஷாரம், வேப்பூர் அரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை பார்வையிட்டு அப்பணிகள் குறித்தும், அதிலுள்ள பிரச்சனைகள் மற்றும் காலதாமதங்கள் குறித்தும் கேட்டறிந்தார். பணிகள் அனைத்தும் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கேட்டுக் கொண்டார்கள். வேப்பூர் மேம்பால பணிகளை இரண்டு வாரத்திற்குள் முடித்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர கேட்டுக் கொண்டார் .
இந்த ஆய்வுகளின் பொழுது, திட்ட இயக்குனர்கள் தேசிய நெடுஞ்சாலை துறை சாவித்திரி தேவி (காஞ்சிபுரம்), ரமேஷ் (கிருஷ்ணகிரி), உதவி செயற்பொறியாளர்கள் ரமேஷ் பிரசாத், ஜெயக்குமார், வட்டாட்சியர்கள் ராஜலக்ஷ்மி, பாக்கியலட்சமி, அருள்செல்வம், சாலை ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.