செய்திகள்

சென்னை புத்தக திருவிழாவில் நாளை மணிமேகலை பிரசரத்தின் 42 நூல்கள் வெளியீட்டு விழா

சென்னை, ஜன. 12–

42வது சென்னை புத்தக திருவிழாவில் மணிமேகலை பிரசுரத்தின் 42 நூல்கள் வெளியீட்டு விழா நாளை (13–ந் தேதி) நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் தியாகராஜன், பிரசாந்த், நடிகை கஸ்தூரி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் மணிமேகலைப் பிரசுரத்தின் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 42வது புத்தக திருவிழாவில் 42 நூல்கள் வெளியீட்டு விழா நாளை (13–ந் தேதி) பிற்பகல் 1.30 மணிக்கு இரட்டை சகோதரிகள் அர்ச்சனா, ஆர்த்தியின் பாடல்களுடன் தொடங்குகிறது.

மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் லேனா தமிழ்வாணன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமை தாங்குகிறார். எஸ்.எம். சில்க்ஸ் அதிபர் எஸ்.எம்.மனோகரன், ஒலிம்பிக் கார்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.முகம்மது பைசல், இளம்பாரி கருணாகரன், துபாய் தமிழ் பண்பலை வானொலி அதிபர் சோனா ராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நடிகர்கள் தியாகராஜன், பிரசாந்த், நடிகை கஸ்தூரி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். 42 நூல்களின் தொகுப்புகளை இலங்கை ஹாசிம் உமர், உலகத் தமிழ் பண்பாட்டுக் கழக தலைவர் ஏ.ரபியுத்தீன், நெல்லை கே.வசந்தன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் செய்து வருகிறார்.

இதில் மணிமேகலை பிரசுர நிறுவனர் அமரர் தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 2, தலைவர் லேனா தமிழ்வாணனின் 250 ஒரு பக்கக் கட்டுரைகள், மக்கள் குரல் துரை. சக்திவேலின் வாழ்வில் வள்ளுவம் – திருக்குறள் நீதிகதைகள் உள்பட 42 நூல்கள் வெளியிடப்படுகின்றன.

மாலை 4 மணிக்கு சாவித்திரி பவுண்டேஷன் சார்பில் ஆடிட்டர் ஜே.பாலசுப்பிரமணியன், மணிமேகலைப் பிரசுரத்திற்கு சிறந்த பதிப்பகத்திற்கான விருதையும், 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் விழா நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் நடைபெறுகிறது. விழாவிற்கு சர்வதேச தங்க சுரங்க அதிபர் பி.ஆர். மகேஸ்வரன், ஆஸிம் முகம்மது கல்வி நிறுவன தாளாளர் எஸ்.சேகு ஜமாலுதீன், நடிகை சீதா, சுஜாதா புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நடிகர்கள் பிரபு, டெல்லி கணேஷ், தம்பி ராமையா, நகுல் மற்றும் ராம்குமார், எஸ்.கே. இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறார். மேலாளர் ஆர்.மோகன்ராஜ் நன்றியுரையாற்றுகிறார். ஜெயஸ்ரீ சுந்தர், கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *