சென்னை, ஜன.23-
சென்னை புத்தக காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்த இந்த கண்காட்சியில் ரூ.16 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது சென்னை புத்தக காட்சி கடந்த 6-ந் தேதி முதல் நேற்று வரை 17 நாட்கள் நடைபெற்றது. 980 அரங்குகள் கொண்ட இந்த புத்தக காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பல்வேறு வகையான புத்தகங்களும் இடம்பெற்றிருந்தன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற இந்த புத்தக காட்சியை ஏராளமான வாசகர்கள் வந்து பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
சென்னை புத்தக காட்சியின் நிறைவு விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பபாசி சார்பில் மாணவ- – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தக பதிப்பு துறையில் பணியாற்றி வரும் 24 பதிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார்.
வாழ்க்கையை
மாற்றிக் காட்டும்
விழாவில் நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்புரை ஆற்றி பேசியதாவது:-
ஒரு நாட்டின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அந்த நாடு சார்ந்த மொழிகளும், கலாசாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைய கணினி காலத்திலும் புத்தகங்கள் உடனான பரீட்சயம் மனிதனின் வாழ்க்கையை மாற்றி காட்டும். ஆறுமுக நாவலர், உ.வே.சாமிநாதன் போன்ற நமது முன்னோர்கள் ஓலைச்சுவடிகளை திரட்டி அவற்றை நமக்கு புத்தகமாக தந்துள்ளனர்.
அவர்களின் கடின முயற்சியால் உருவாக்கப்பட்டவை இன்று நாம் கணினியை தட்டியவுடன் தெரிந்து கொள்ளும் அளவிற்கு புத்தகங்கள் உருமாறி உள்ளது. நம்மால் ஈட்டிய செல்வங்கள் எல்லாம் ஒரு காலத்தில் நம்மை விட்டு சென்று விடும் இறுதியாக நம்முடன் நிற்பது நாம் என்ற உணர்வு மட்டும் தான். எனவே வாழ்க்கையில் அடைய வேண்டியதை அடைந்தால் மட்டுமே நாம் வாழ்க்கையை முழுமையாக உணர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.16 கோடிக்கு விற்பனை
விழா நிறைவில் பபாசி அமைப்பின் தலைவர் எஸ்.வயிரவன், துணைத் தலைவர் பெ.மயிலவேலன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 6-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட 46-வது சென்னை புத்தக காட்சி இன்றுடன் (நேற்று) 17 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான வாசகர்கள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு 10 லட்சம் வாசகர்கள் வருகை தந்து, ரூ.10 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை அடைந்தன. ஆனால், இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட கூடுதலாக நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த 4, 5 நாட்களாக தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்ததுடன், ஒட்டு மொத்தமாக 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். மேலும், மொத்தமாக ரூ.16 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புத்தக காட்சிக்கு தமிழக அரசு மிகவும் சிறப்பாக உதவி புரிந்துள்ளது.
இந்த ஆண்டு சர்வதேச புத்தக அரங்கம் அமைக்கப்பட்டது வாசகர்களைவிட பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருந்தது. சிறை கைதிகளுக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஏராளமான புத்தகங்களை வழங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.