செய்திகள்

சென்னை புத்தக கண்காட்சி நிறைவு: 15 லட்சம் பார்வையாளர்கள், ரூ.15 கோடிக்கு விற்பனை

சென்னை, மார்ச் 7–-

சென்னையில் நடைபெற்றுவந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. புத்தக கண்காட்சிக்கு 15 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ‘பபாசி’யின் 45-வது புத்தக கண்காட்சி, கடந்த ஜனவரி 6-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. பின்னர் கொரோனா சூழல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து பெருந்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்தனர். இதுதவிர ஒவ்வொரு நாளும் எழுத்தாளர்களின் சிறப்புரை, பட்டிமன்றம், சிறந்த நூல்களுக்கு விருது வழங்குதல் என சிறப்பு நிகழ்ச்சிகளும் அரங்கேறி வந்தன. இதில் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்கேற்றனர். கடந்த 19 நாட்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

நிறைவு விழா, கண்காட்சி வளாகத்தில் உள்ள விழா அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டார். ‘பபாசி’ தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் குமரன், துணைத்தலைவர் சுப்ரமணியன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

25 ஆண்டுகள் பதிப்பு துறையில் பணியாற்றியவர்கள், புத்தக கண்காட்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் புத்தக கண்காட்சியின்போது நடந்த ஓவியம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ- – மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிறைவு நாளான நேற்று புத்தக கண்காட்சியில் வாசகர்கள் எண்ணிக்கை மிகுதியாகவே இருந்தது. விடுமுறை நாள் என்பதால் குடும்பம் குடும்பமாக வாசகர்கள் திரண்டனர். இதனால் அனைத்து அரங்குகளிலும் பெரும் கூட்டம் காணப்பட்டது.

இந்த ஆண்டு, சிறுகதைகள், வரலாற்று நூல்கள், புதினங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வாழ்க்கைத் தத்துவங்கள் போன்ற வகை புத்தகங்கள் அதிகளவு விற்பனை ஆகின. சென்னை புத்தக கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. புத்தக கண்காட்சிக்கு 15 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும், ரூ.15 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கண்காட்சி நடந்த நாட்களில் பொதுமக்களுக்குத் தேவையான அறிவிப்புகளை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஜென்சி என்ற திருநங்கை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வந்தார். கண்காட்சியின் நிறைவில் அவருக்கும் ‘பபாசி’ நிர்வாகிகள், பதிப்பாளர்கள், வாசகர்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.