செய்திகள்

சென்னை-–பினாங்கு விமான சேவை தொடங்க சாத்தியக்கூறு ஆராயப்படும்: மத்திய அமைச்சர் பதில்

சென்னை, மார்ச்.7-

சென்னை–பினாங்கு இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.2.2023 அன்று கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில், பினாங்கில் வாழும் தமிழர்கள் குறித்தும், பினாங்கு மற்றும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பையும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். அதில், தமிழ்நாட்டிற்கும் பினாங்கிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்புகளையும், வர்த்தக உறவுகளையும், சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் அவர் கோடிட்டு காட்டியிருந்தார்.

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தற்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்திக்கொள்ளவும், தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், சென்னை – பினாங்கு இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்தவும், தனது கடிதத்தில் முதலமைச்சர் கோரியிருந்தார்.

முதலமைச்சரின் கடிதத்தை பரிசீலித்த மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதில், ‘சென்னை மற்றும் பினாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்திய விமான நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும்’ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *