செய்திகள்

சென்னை பாம்பு பண்ணையில் டஜன் குட்டிகளை ஈன்ற மலைபாம்பு

சென்னை, ஜூலை 31–

சென்னையின் மையப் பகுதியான கிண்டியில் அமைந்துள்ள பாம்பு பண்ணையில், மலைபாம்பு ஒன்று டஜன் குட்டிகளை ஈன்றுள்ளது. இதே போல ஒரு முதலையும் 3 குட்டிகளை ஈன்றுள்ளது.

உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னை நகரில் கடந்த மார்ச் முதல் லாக்டவுன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே யாரும் வரக்கூடாது. வீட்டில் இரு, தனித்திரு பாதுகாப்பாய் இரு என்ற வாசகங்களை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதே போல தொற்று குறித்த விழிப்புணர்வை –முகக் கவசம் அணியுங்கள், கைகளை பலமுறை கிருமி நாசினியைப் பயன்படுத்தி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் பொது மக்களை வலியுறுத்தி வருகின்றன. சென்னை நகரின் இருதயப் பகுதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாக இருக்கும் பகுதி கிண்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்திருக்கும் பாம்பு பண்ணை அமைந்திருப்பது மிகவும் சிறப்புக்குரியது. லாக்–டவுன் காலத்தில் வீட்டுக்குள்ளேயே மக்கள் அடைப்பட்டு இருப்பதால்,வெளியே வரத் தடையும் இருப்பதால்… பாம்பு பண்ணைக்கு மக்கள் வருவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

இது, இந்த பண்ணையில் இருக்கும் உயிரினங்கள் இனப் பெருக்கம் செய்வதற்கு – (அமைதியான சூழல்) சுமுகமான ஒரு சூழலை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக பண்ணையில் இருக்கும் மலைப் பாம்பு ஒன்று முட்டை இட்டு – அடைகாத்து– குட்டிகளை ஈன்றுள்ளது. (சுமார் டஜன் குட்டிகள்). இதே போல காரியால்– மக்கர்– வகை முதலையும் முட்டையிட்டு அடைகாத்து 3 குட்டிகளை ஈன்றுள்ளன. லாக்–டவுன் காலத்தில் பாம்பு பண்ணைக்கு இவை புதிய வரவு என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

டாக்டர் பால்ராஜ், ராஜரத்னம் தலைமையில்…

1972–ம் ஆண்டில் உருவானது இந்த கிண்டி பாம்பு பண்ணை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வருகை தந்து கண்டு ரசித்து வரும் ஒரு பொழுதுபோக்கு சுற்றுலா மையம் என்றே சொல்லலாம். பாம்பு பண்ணை துவக்கப்பட்ட நாளிலிருந்து இங்கே வேலை பார்த்து நீண்ட… நெடும் அனுபவம் பெற்றவர் மணி.

உயிரினங்களை பாதுகாத்து பராமரிக்கும் ஊழியர்கள் 5 பேர் இருக்கிறார்கள் இங்கே. பாம்பு பண்ணையின் தலைவர் டாக்டர் பால்ராஜ், இயக்குனர் ராஜரத்னம், துணை இயக்குனர் டாக்டர் எஸ்.கணேஷ். உயிரினங்களின் பாதுகாப்புக்கும் இனப் பெருக்கத்துக்கும், சிறந்த முறையில் அவற்றை பராமரிப்பதற்கும் ஏற்பாடுகளை இவர்கள் இந்தப் பண்ணையில் செய்திருக்கிறார்கள். ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கு இந்தியாவலேயே அமைக்கப்பட்டிருக்கும் முதல் பூங்கா – இந்த பாம்பு பண்ணை என்பதும் பெருமைக்குரிய விஷயம். இதே போல சென்னை புற நகரில் முதலைப் பண்ணை அமைந்துள்ளது. இவ்விரண்டும் நாட்டின் பழைமையான மையங்களில் ஒன்று என்பதும் தனிச் சிறப்பு.

பார்வையாளர்கள் 4 மாதமாக பாம்பு பண்ணைக்கு வரவில்லை. இந்நிலையில் நுழைவுக் கட்டணம் மூலம் வரும் வருவாய் இல்லை. பாம்பு பண்ணையில் பராமரிக்கப்படும் உயிரினங்களுக்கு உணவு அளித்து, பண்ணையை நிர்வகிக்க நிதி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

நிதி திரட்டுவதற்காக ‘கேர் மை ஸ்நேக்’ (என்னுடைய பாம்பைக் காப்போம்) என்னும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அனுப்பப்படும் நிதி, உயிரினங்களுக்கு உணவு, பராமரிப்பு, சென்ட்ரல் ஜூ அதாரிட்டி மற்றும் தமிழ்நாடு ஓபன் யூனிவர்சிட்டியுடன் (மத்திய உயிரியல் பூங்கா குழுமம், தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகம்) இணைந்த ஆராய்ச்சி மைய செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். சென்னை பாம்பு பண்ணைக்கு அதன் டிரஸ்ட்டுக்கு (சென்னை ஸ்நேக் பார்க் டிரஸ்ட்) பணம் அனுப்புபவர்கள் அதன் சிறப்பு செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் திபாங்கர் கோஷை (91–73959 17040 என்னும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *