போஸ்டர் செய்தி

சென்னை பல்கலைக்கழத்தில் ரூ.5 கோடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, செப். 8–

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு நிறைவு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கலை அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.துரைசாமி வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-மாணவர்கள் படிக்கும்போது அவர்கள் கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்கவேண்டும். ஆனால் சிலர் புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஓராண்டை நீங்கள் சிந்தித்தால் நெல் நடுங்கள்.

10 ஆண்டுகளை நீங்கள் சிந்தித்தால் மரங்களை நடுங்கள்.

100 ஆண்டுகளை நீங்கள் சிந்திப்பீர்களேயானால்,

மக்களுக்கு கல்வி கற்பியுங்கள்” என்று ஒரு சீன பழமொழி கூறுகிறது. அம்மாவின் அரசும் மூன்று செயல்களையும் செய்து வருகிறது.

இந்தியாவில் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சமீபத்திய அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அறிக்கையின் படி, தேசிய மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 25.8 சதவீதம் ஆகும். ஆனால் தமிழ்நாட்டினுடைய சேர்க்கை விகிதம் 49.1 சதவீத மாணவர் சேர்க்கை உள்ளது.

அதேபோல, மாணவிகளின் சேர்க்கை 48.2 ஆகும். ஆகவே, இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுடைய சேர்க்கை சதவிகிதத்தில் தமிழ்நாடு தான் முதலிடம் பெற்றிருக்கிறது.

அதேபோல, ஆதிதிராவிடர் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21.1 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டில் 38.3 சதவிகிதமாகவும் உள்ளது.

பழங்குடியினருக்கான தேசிய மாணவர் சேர்க்கை விகிதம் 15.4 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் 36 சதவிகிதமாகவும் பெற்று தொடர்ந்து தமிழ்நாடு தரவரிசையில் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த சாதனையை அடையும் முன் அம்மாவின் அரசு செயல்படுத்திய அரிய திட்டங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

* அதிக எண்ணிக்கையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்கள் அமைத்து இருப்பது,

மாணவர் சேர்க்கையில் முன்னணி

* மாநிலத்தில் தொலைதூரம் மற்றும் பின்தங்கிய இடங்களிலும், உயர்கல்வி நிறுவனங்கள் அமைத்து இருப்பதால் மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.

* முதல் தலைமுறை பட்டதாரி கட்டணச் சலுகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, பின்தங்கிய மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை, இலவச பேருந்து அட்டை மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிக்கும் மாணவர் வரை இலவச கல்வி போன்ற முன்னோடி திட்டங்களால் இது சாத்தியமாயிற்று.

பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணங்களான மெட்ராஸ், பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகியவற்றில் துவங்கப்பட்ட 3 பல்கலைக்கழகங்களில், முதல் பல்கலைக் கழகம் சென்னை பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இப்பல்கலைக் கழகம், செப்டம்பர் 5, 1857 அன்று நிறுவப்பட்டது. முதலில் பட்டப்படிப்பிற்கான தேர்வுகளை நடத்தும் நிறுவனமாக துவங்கப்பட்டு, பின்னர் ஆய்வு அமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கற்றல் நடவடிக்கைகள் கொண்ட பல்கலைக் கழகமாக செயல்பட சென்னை பல்கலைக் கழக சட்டம், 1923 இயற்றப்பட்டு, அப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்த பல்கலைக்கழகத்தின் அடிப்படை தத்துவம் ‘‘மரபு தொடர்ச்சியுடன் நவீன மாற்றம்” ஆகும். எனவே இப்பல்கலைக் கழகத்தில் பாரம்பரிய துறைகளான மானுடவியல், சமூகவியல், மொழிக் கல்வி, மதம் தொடர்பான கல்வி, பண்டைய வரலாறு, தத்துவம், இசை, உளவியல் மற்றும் பொருளாதாரம் இவற்றுடன் சமகாலத் துறைகளான காப்பீட்டு கணிப்புத் துறை, பாதுகாப்பு மற்றும் குற்றவியல், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிர் தகவலியல், மகளிரியல் மற்றும் பொருளாதார கணித புள்ளியியல் போன்றவை கைகோர்த்து நடக்கின்றன.

நோபல் பரிசு

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த சர்.சி.வி.ராமன், டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசுகளை பெற்றுள்ளனர். இங்கு திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவரான பேரறிஞர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஏவுகணை மன்னன் டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்றார்கள்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர்களைத் தவிர எண்ணற்றோர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் முக்கிய துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சென்னை பல்கலைக்கழகம்தான் 1978–79ம் ஆண்டில் புரட்சித்தலைவர் ஆட்சியில் முதன்முறையாக தன்னாட்சி கல்லூரிகளை ஏற்படுத்தியது. இப்பல்கலைக் கழகத்தில் 87 துறைகள் மற்றும் மையங்கள் 257 ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்தில் 23 தன்னாட்சி கல்லூரிகளையும் சேர்த்து 133 இணைவு கல்லூரிகளும், 53 இணைவு நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் மொத்தம் 2.78 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

மேலும், இந்தப் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம், கல்வியை தொடர முடியாத பலரை இளநிலை பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகளாகவும் உருவாக்கி வருகின்றது.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2018-ன்படி, முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பல்கலைக் கழகங்களில், 7 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சென்னைப் பல்கலைக்கழகம் 18வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகம் வரும் ஆண்டுகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.

2018ம் ஆண்டு மார்ச் மாதம் யூஜிசி நிறுவனம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்ந்த தரத்துடனான தன்னாட்சி நிலையை வழங்கியது, இந்த பல்கலைக் கழகம் உயர்கல்வித் துறையில் ஆற்றும் பணிக்கு ஒரு நற்சான்றாகும்.

உயிர் கல்வியில் புரட்சி

ஆராய்ச்சி படிக்கும் மாணவர்களை இந்த பல்கலைக்கழகம் அதிக அளவில் ஊக்கப்படுத்தி வருகிறது. மக்கள் தொகைக்கேற்ப அதிகமான கல்லூரிகளை துவக்கும் நோக்கத்தினை நிறைவேற்றத்தான் எம்.ஜி.ஆர். சுயநிதிக் கல்லூரிகளை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அனுமதியளித்து, உயர் கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

உயர்கல்வித் துறையில் அம்மா மற்றும் அம்மாவின் அரசால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

* அம்மாவின் அரசும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக, பின்தங்கிய பகுதிகளில் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியிருக்கிறது.

* தனியார் துறையில் கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்க சாய் பல்கலைக்கழகம் உட்பட உயர்தர தனியார் பல்கலைக் கழகங்களை அமைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* 16 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 10 பல்கலைக்கழகங்களில் காணொலி காட்சியுடன் கூடிய செயல்திறன் வளர்க்கும் வகுப்பறைகள், மாணவர்களின் மொழித் திறன்களை உயர்த்தி, அவர்களை உலகச் சந்தையில் போட்டியிட தயார்படுத்தும் வண்ணம், ஆங்கிலம், சீனம், பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற அயல்நாட்டு மொழிகளைக் கற்பதற்கான தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள், புகழ்பெற்ற வெளிநாட்டு பேராசிரியர்களை வரவழைக்கும் திட்டம் மற்றும் பாடத் திட்ட வளர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பயிற்சி

* அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களை அயல் நாடு அனுப்பி பயிற்றுவிக்கும் திட்டத்தின் மூலம் 25 மாணவர்களும், 5 பேராசிரியர்களும் இங்கிலாந்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பயில ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய் வீதம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வேலை வாய்ப்பிற்கு ஆளுமைத் திறன், பேச்சுத் திறன், குழுப்பணித் திறன் போன்ற 60 விதமான அடிப்படை மென்திறன்களை மாணவர்களுக்கு கற்பிக்க 5 பல்கலைக்கழகங்கள் உட்பட 30 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மென்திறன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவதைப் போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களும் 15 நாட்கள் தொழில் பயிற்சி பெறும் பொருட்டு, அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அம்மா அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் தொழில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அறிவியல் ஆசிரியர் விருது

* பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி நிதியாக 25 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

* கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் இயற்கை அறிவியல் போன்ற துறைகளில் உள்ள அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களில் 10 ஆசிரியர்களின் பணியினை பாராட்டி சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2018–19ம் ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுடன் 25,000 ரூபாய் பரிசுத் தொகையாகவும் வழங்கப்பட உள்ளது.

* கிராமப்புற மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொணரும் விதத்தில் இரு சிறந்த கிராமப்புற கண்டுபிடிப்பாளர்களுக்கு கிராமப்புற புதுமை விருது 2018–19ம் ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

மாணவர்களின் கல்வி மேம்பட அம்மாவின் அரசு இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம்நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே என்ற பாடல் மூலம் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும்

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா, வளர்ந்து வரும் உலகத்திற்கே நீ வலது கையடா நீ வலது கையடா,

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா,

என்ற பாடல் மூலம் புரட்சித் தலைவர் மாணவர்கள் ஆற்ற வேண்டிய சமுதாய கடமைகள் குறித்து விரிவாக பாடியுள்ளார்.

நமது நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் உள்ளது. நம்மை சுற்றிலும் பல சமூக பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை உணர்வுப் பூர்வமாக அணுகாமல் அறிவுப் பூர்வமாக அணுக வேண்டும்.

மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்கள் படிக்கும்போது அவர்கள் கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்கவேண்டும். ஆனால் சிலர் புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அம்மா மாணவர்களின் எதிர்காலம் பற்றி கூறுகையில், உங்களுக்கு ஒரு சமுதாய பொறுப்பு உள்ளது. எளிதாக தட்டி கழித்து விட முடியாத பொறுப்பு அது. உங்களை வளர்த்துவிட்ட நிறுவனத்திற்கும், உங்கள் மாநிலத்திற்கும், தேசத்திற்கும் உங்கள் பங்களிப்பை அளிக்கின்ற கொடைத் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தேசிய கட்டுமானம் என்பது அங்கிருந்துதான் துவங்குகின்றது. மாற்றத்திற்கு வித்திடும் தூதுவர்களாக நீங்கள் உருவாவதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

மாணவ, மாணவியர்கள் சகோதர மனப்பான்மையுடன் பழக வேண்டும். நமது குறிக்கோள் கல்வியை நல்ல முறையில் கற்பது. பின்னர் நாம் படித்த இந்த கல்வியைக் கொண்டு நாட்டிற்கு நல்லது செய்வது ஆகும்.

ஆசிரியர்களின் முக்கிய பங்கு

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போதே, இடையில் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதனை தீர்க்க அவர்கள் பயன்படுத்த வேண்டிய நெறிகள், தேசப் பற்று, நேர்மை ஆகியவற்றைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.

ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்பது ஒரு முக்கோண வடிவம். இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதே சமயத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்பி விட்டதாலேயே தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது.

படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளிடையே ஏற்படுத்தும், அதே சமயத்தில், பிள்ளைகளை நல்ல நிலைக்கு உயர்த்த பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த படிப்புதான் படிக்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆர்வமாகப் படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பில் அடைய முடியாது. அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க அனுமதித்தால் அனைத்து மாணவர்களின் வெற்றி உறுதி.

படிக்கும் எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. எனவே, மாணவர்கள் படிக்கும் படிப்புகள் அனைத்திற்குமே நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மாணவர்களிடையே பேசும்போது, வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகத்தினரை அதை படிக்க வைப்பது நமது கையில்தான் உள்ளது என்றார்.

லட்சியம் வேண்டும்

டாக்டர் அப்துல்கலாம் கூறிய அந்த நிலையை அடைய வேண்டுமென்றால், முதலில் நமக்கு திடமான லட்சியம் வேண்டும். அதை அடையக்கூடிய அறிவைத் தேடிப் பெற வேண்டும். அதற்கு கடின உழைப்பு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது. பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். விடா முயற்சி வேண்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல ஒழுக்கம் வேண்டும். குடும்பத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நல்லதொரு அங்கமாக இருப்பேன் என்ற உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் அனைவரும் சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக இருக்க வேண்டும். ஏட்டுக் கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு போதாது. அத்துடன் பொது அறிவையும், சமயோசித அறிவையும் வளர்த்துக் கொண்டால்தான் வாழ்க்கையில் உண்மையிலேயே வெற்றி பெற முடியும்.

தான் படித்த கல்வியை சமயோசித முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறும் வகையில் மாற்றியமைத்துக் கொண்டு, மாணவர்கள் செயல்பட வேண்டும்.

காவியங்கள் ஒருவனை உற்சாகம் உள்ளவனாக மாற்றுகிறது,

கணக்குகள் ஒருவனை நுண்மையானவனாக மாற்றுகிறது,

தத்துவ ஞானம் ஒருவனை ஆழ்ந்த பொருள் உள்ளவனாய் மாற்றுகிறது,

அறிவியல் அறிவு ஒருவனை விஞ்ஞானியாக மாற்றுகிறது,

நீதி நூல்கள் ஒருவனை ஒழுக்கமுள்ளவனாக மாற்றுகிறது,

தர்க்க நூல்கள் ஒருவனை வாதம் செய்வதில் வல்லவனாக மாற்றுகிறது,

ஆனால் தன்னைத் தான் அறியும் நிலையே ஒருவனை மனிதனாக மாற்றுகிறது,

அந்த சுயசிந்தனையை தூண்டும் செயலைத்தான் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சீர்திருத்தங்கள்

எதிர்கால தலைமுறையினரும் பேசக் கூடிய வகையில் நீடித்த சீர்திருத்தங்களை கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த அம்மாவினுடைய அரசு உறுதி பூண்டுள்ளது. தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனித வள மேம்பாட்டை ஊக்குவித்து, உயர்தரம் வாய்ந்த கல்வியாளர்களை உருவாக்குவதும், தமிழ்நாட்டை கல்வியின் ஒரு பன்னாட்டு மையமாக உருவாக்குவதும் அம்மாவின் அரசின் லட்சியம் என்று கூறி கீழ்க்கண்ட இரண்டு அறிவிப்புகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன்.

எம்.ஜி.ஆர். ஆய்வு மையம்

1. சென்னை பல்கலைக் கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது. அந்த வகையில், இப்பல்கலைக் கழகத்தின் 160ம் ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றினை குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மையத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆரின் முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலக கட்டடம், மணிக்கூண்டு கட்டடம், ஓரியண்டல் கல்வி நிறுவன கட்டடம் மற்றும் நூற்றாண்டு கட்டடம் ஆகிய புராதன கட்டடங்களை தொன்மையை பாதுகாத்து பழுது பார்த்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாணவச் சமுதாயம் நாளைய இந்தியாவை, தமிழகத்தை ஆளக்கூடிய சமுதாயம். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக்கூடிய வயது உங்களுடைய வயது. இந்த வயதில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய நிலையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். பிற்காலத்திலே உங்களுடைய வாழ்க்கை சிறக்க வேண்டுமென்று சொன்னால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்பொழுது விளையாட்டாக இருந்துவிட்டால், பின்னர் உங்கள் வாழ்க்கை இருள் சூழ்ந்த வாழ்க்கையாக அமைந்துவிடும். ஆகவே, கல்லூரிப் பருவம் என்பது கிடைத்தற்கரிய ஒரு பருவம். அந்தக் கல்லூரி வாழ்க்கையில்தான் ஒரு மாற்றம் ஏற்படும். பல்வேறு பிரிவினர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து படிக்கும்பொழுது பலருடைய நட்பு கிடைக்கின்றது. அவர்களுடைய அறிவு, பண்பு அத்தனையும் கிடைக்கின்றது. அத்தனையும் கிடைப்பதற்கு இந்தக் கல்லூரிதான் மையமாக விளைகின்றது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். மனிதனாகப் பிறந்தால் ஒவ்வொருவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். அப்படிப் கற்றால்தான் கல்லூரிப் படிப்பின் மூலம் அவர்களுடைய வாழ்க்கை சிறக்கும், செழிக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் டாக்டர்.மணிகண்டன், பாலகிருஷ்ணரெட்டி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் டி.ஜி.பி. நடராஜ், தி.நகர் சத்தியா, சிறுணியம் பலராமன், பல்கலைக் கழக பதிவாளர், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *