சென்னை, ஏப். 6–
சென்னை, நெல்லை, ஈரோடு பகுதிகளில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ரத்னா நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேலு. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும், இவர் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் நேற்று காலை தங்கவேலு வீட்டில் சோதனை நடத்தினர்.
இதேபோல், பாளையங் கோட்டை மகாராஜநகரில் உள்ள திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர்கல்லூரி அருகேயுள்ள நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்தில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 12 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், நாங்குநேரி அருகே விஜயநாராயணத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதேபோல், கோவை, அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ்பகுதி அருகே உள்ள அமைச்சர்கே.என்.நேருவுக்கு நெருக்கமானவரான அவிநாசி ரவி என்பவரது அலுவலக கட்டிடத்தில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பாராளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் தங்கவேலு வீடுகளில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.நெல்லை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் சத்தியமூர்த்தி என்பவரது கட்டுமான நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.